search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதை படத்தில் காணலாம்.
    X
    வருசநாடு அருகே மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதை படத்தில் காணலாம்.

    மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து குறைவு

    மழை ஓய்ந்த நிலையில் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளது.
    வருசநாடு:

    கடமலை மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. மூலவைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 150 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு
    வருகிறது.

    மேலும் மூலவைகை ஆற்றை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மூலவைகை ஆறு வறண்டு போகும் நேரங்களில் உறை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதேபோல விவசாயமும் பாதிப்படையும்.

    ஆனால் வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூலவைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து காணப்படுவதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் மழையின் அளவு குறைந்து காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    தொடர்ந்து மழை இல்லாத பட்சத்தில் அடுத்த சில நாட்களில் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து முழுமையாக நின்று விடும் நிலை ஏற்பட்டுள்ளது.அடுத்து கோடை காலம் என்பதால் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் மிக குறைவு.

    எனவே உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஒன்றிய மற்றும் ஊராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தை போக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக கிராமங்களில் குடிநீருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 69.3 அடியாக உள்ளது.

    வரத்து 469 கன அடி. நேற்று வரை 869 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 269 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5652 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணை நீர் மட்டம் 135.60 அடியாக உள்ளது. வரத்து 330 கன அடி. திறப்பு 900 கன அடி. இருப்பு 6017 மி.கன அடி.

    பெரியாறு 31, கூடலூர் 32, உத்தமபாளையம் 4.2, வைகை அணை 1, மஞ்சளாறு 10, சோத்துப்பாறை 21, பெரியகுளம் 31, போடிநாயக்கனூர் 5.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
    Next Story
    ×