search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள்

    அவிநாசி, கொளத்துப்பாளையம், மடத்துக்குளம் ஊராட்சியில் தலா 18 வார்டுகள் உள்ளன.
    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாகி உள்ளது. திருப்பூர் மாநகராட்சி, ஆறு 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் என திருப்பூர் மாவட்டத்தில் 440 வார்டுகளுக்கான நகர உள்ளாட்சி தேர்தலை சந்திக்க 11.32 லட்சம் வாக்காளரும் மாவட்ட அதிகாரிகளும் தயாராகிவிட்டனர்.

    திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 3 லட்சத்து 62 ஆயிரத்து 353 ஆண்கள், 3 லட்சத்து 50 ஆயிரத்து 247 பெண்கள், 170 திருநங்கையர் என 7.12 லட்சம் வாக்காளர்கள் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

    உடுமலை நகராட்சி -33, தாராபுரம் -30, திருமுருகன்பூண்டி -27, வெள்ளகோவில் -21, பல்லடம் மற்றும் காங்கயம் நகராட்சிகளில் தலா 18 வார்டுகள் என 6 நகராட்சிகளில் 147 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

    6 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 998 ஆண்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 364 பெண்கள், 21 திருநங்கைகள் என 2 லட்சத்து 45 ஆயிரத்து 383 வாக்காளர் உள்ளனர்.  

    அவிநாசி, கொளத்துப்பாளையம், மடத்துக்குளம் ஊராட்சியில் தலா 18 வார்டுகள் உள்ளன. தளி பேரூராட்சியில் 17 வார்டுகளும், கன்னிவாடியில், 12 வார்டுகளும் உள்ளன.

    மற்ற 10 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சிகளில் மொத்தம் 84 ஆயிரத்து 827 ஆண்கள், 89 ஆயிரத்து 384 பெண்கள், 8 திருநங்கைகள் என ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 219 வாக்காளர் உள்ளனர்.

    ஆகமொத்தம், திருப்பூர் மாவட்டத்தில் 440 வார்டுகளுக்கு நகர உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடக்க உள்ளது.

    நகர உள்ளாட்சிகள் அளவில் 5 லட்சத்து 66 ஆயிரத்து 178 ஆண்கள், 5 லட்சத்து 65 ஆயிரத்து 995 பெண்கள், 199 திருநங்கைகள் என 11 லட்சத்து 32 ஆயிரத்து 372 வாக்காளர் உள்ளனர். 

    கவுன்சிலர் ஆகும் கனவுடன் தி.மு.க., அ.தி.மு.க., உள்பட பல்வேறு கட்சியினரும் வலம் வருகின்றனர். கடந்த, 2011க்கு பிறகு நகர உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. 2016 தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 

    நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடப்பதால் தேர்தலின் மூலமாக கவுன்சிலரை தேர்வு செய்ய வாக்காளர்கள் தயாராகிவிட்டனர்.

    திருப்பூர் மாநகராட்சியில் ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர். 6 நகராட்சிகளிலும் ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளரே பெரும்பான்மையாக உள்ளனர். மற்றபடி 15 பேரூராட்சிகளிலும் ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர் அதிகம் உள்ளனர். 

    மாநகராட்சியின் 60 வார்டுகள் நீங்கலாக, மற்ற அமைப்புகளின் 380 வார்டுகளில் பெண் வாக்காளரே, வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளுடன் அமைந்துள்ளது. இந்த வார்டுகள் தலா 15 வார்டுகள் கொண்ட நான்கு மண்டலங்களாக செயல்படுகிறது. இதில் வார்டு 1 முதல் 15 வரை வேலம்பாளையம் முதல் மண்டலம், 16 முதல் 30 வார்டு வரை தொட்டிபாளையம் இரண்டாவது மண்டலம், 31 முதல் 45 வார்டு வரை நல்லூர் 3வது மண்டலம் மற்றும் 46 முதல் 60 வார்டு வரை ஆண்டிபாளையம் 4வது மண்டலம் என்ற அடிப்படையில் இயங்கி வந்தது.

    இதில் கடந்த 2019ம் ஆண்டு மாநகராட்சி வார்டுகள் மறைவரையறை மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் மண்டலக்குழுக்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய வார்டுகள் அடிப்படையில் புதிய மண்டலங்கள் ஒருங்கிணைத்து மண்டலக்குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதல் மண்டலம் - வார்டுகள் 1, 9 முதல் 15, 21 முதல் 27 வரை என 15 வார்டுகள்.

    இரண்டாவது மண்டலம் - வார்டுகள் 2 முதல் 8 வரை, 16 முதல் 20 வரை, 30 முதல் 32 வரை என 15 வார்டுகள். மூன்றாவது மண்டலம் - வார்டுகள் 33 முதல் 35 வரை, வார்டு 44 முதல் 51 வரை, 56, 58, 59, 60 ஆகிய 15 வார்டுகள்.

    நான்காவது மண்டலம் - வார்டுகள் 28, 29, வார்டு 36 முதல் 43 வரை, 52 முதல் 55 வரை மற்றும் 57 ஆகிய 15 வார்டுகள். புதிய மண்டலங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறித்து மாநகராட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்று, மாநகராட்சிக்கான தேர்தல் இந்த அடிப்படையில் நடைபெறும் எனத்தெரிகிறது.
    Next Story
    ×