search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருத்தரங்கில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்
    X
    கருத்தரங்கில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்

    சமூக நீதி கொள்கையை நாடு முழுவதிலும் கொண்டு சேர்ப்போம்: மு.க.ஸ்டாலின் உரை

    தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக, சமூக நீதிக்கான வெற்றியை அடைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்தியா முழுவதும் சமூக நீதி பேரியக்கம் பரவ வேண்டும் என்று தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்கள். அந்த உழைப்பு வீண் போகவில்லை. இந்திய வரைப்படத்தின் கிழக்கும், மேற்கும், வடக்கும், தெற்கும் என பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் இந்த  காணொலி வாயிலாக இன்றைக்கு இணைந்திருக்கிறோம். சரியாக சொல்ல வேண்டுமென்று சொன்னால், நம்மையெல்லாம் இணைத்தது சமூக நீதி என்ற கருத்தியல் தான். 

    திராவிட இயக்கம் போட்ட விதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் அறுவடையைத் தான் இப்போது நாம் பார்க்கிறோம். 

    தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக, சமூக நீதிக்கான வெற்றியை அடைந்துள்ளோம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகளிலும் பெற்றிருப்பதன் மூலமாக, சமூக நீதி வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனை என்பது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் மூலம் இந்தச் சாதனையை நாம் பெற்றிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான பங்களிப்பை செய்துள்ளது என்பதை தலை நிமிர்ந்து சொல்வதை நான் பெருமையாக நினைக்கிறேன். 

    சமூக நீதி என்பது திராவிட இயக்கம் இந்த நாட்டிற்குக் கொடுத்த மிக முக்கியமான கொடையாகும். சமூக நீதி என்பது அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். 

    அனைத்து சமூகத்திற்குமான இட ஒதுக்கீட்டை 1921ஆம் ஆண்டு வழங்கியது நீதிக் கட்சியின் ஆட்சி. இந்த இட ஒதுக்கீட்டிற்கு, அதனுடைய முறைக்கு உச்சநீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாக போராடி 1950ஆம் ஆண்டு அரசியல் சட்டத் திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராஜரும். 

    சமூக நீதி என்பது சமூக சமத்துவம் ஆகும். அது கல்வியில் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். “எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று உலகப் பொருளாதார மேதை அமர்த்தியா சென் சொல்லியிருக்கிறார்.

    அத்தகைய நீதியை உருவாக்கவே திராவிட இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இரத்த பேதம் இல்லை - பால் பேதம் இல்லை என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் ஆகும். சமூக நீதியும் - பெண்ணுரிமையும்தான் தலையாய இலட்சியம் ஆகும்.
    இந்த மகத்தான கொள்கையைத் தமிழத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் தொடங்க இருக்கிறோம். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×