search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காய்கறி சாகுபடியில் விலை குறைவு - உடுமலையில் 50 லட்சம் நாற்றுக்கள் தேக்கம்

    தக்காளி 22 நாட்களிலும், மற்ற காய்கறிகள், 30 நாட்களுக்குள்ளும் விளைநிலத்தில், நடவு செய்ய வேண்டும்.
    உடுமலை:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி, கத்தரி, மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட நாற்றுக்களை சுற்றுப்பகுதியிலுள்ள 30க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகளில் வாங்கி விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.

    நாற்றுப்பண்ணைகள் ஒவ்வொன்றும், தலா 7 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். ஒரு ஏக்கருக்கு தக்காளி நாற்றுக்கள் 10 ஆயிரமும், மிளகாய் 7 ஆயிரம், கத்தரி 5 ஆயிரம், காலிபிளவர் 10 ஆயிரம் நாற்றுக்கள் தேவை உள்ளது.

    இதில் தக்காளி 22 நாட்களிலும், மற்ற காய்கறிகள், 30 நாட்களுக்குள்ளும் விளைநிலத்தில், நடவு செய்ய வேண்டும். கடந்தாண்டு, வட கிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்ததால் விளை நிலங்களில் மழை நீர் அதிகளவு தேங்கி சாகுபடி பணியை துவக்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.

    மழை குறைந்து வெயில் துவங்கிய நிலையில் டிசம்பர் இறுதியில் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

    இதனால் நாற்றுப்பண்ணைகளில் காய்கறி நாற்றுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மழை காரணமாக சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்ற நோக்கில் நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

    இந்நிலையில் திடீரென மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், சின்ன வெங்காயம், காலிபிளவர், பீட்ரூட் உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் திரும்பியதால் நாற்றுப்பண்ணைகளில் தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் தேங்கியுள்ளன.

    இதுகுறித்து நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:

    தொடர் மழையால் காய்கறி சாகுபடி பாதித்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை நாற்றுக்கள் விற்பனை தீவிரமாக நடந்தது. தக்காளி சாகுபடி செய்த 60 நாட்களில் அறுவடைக்கு வந்து 40 நாட்கள் வரை காய்க்கும்.

    தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை சரிவை சந்தித்து 14 கிலோ கொண்ட பெட்டி சராசரியாக ரூ.120 வரை மட்டுமே விற்கிறது. வார இறுதி நாட்கள், முழு ஊரடங்கு நாட்களில் 70 ரூபாயாக குறைந்துள்ளது.

    விலை குறைவு, வெயில் காலம் துவங்கினால், காய்கறி பயிர்கள் வேர் பிடித்தல், மகசூல் பாதிப்பு உள்ளிட்ட சிக்கல் ஏற்படும் சூழல், தொற்று பரவல் காரணமாக விற்பனை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. 

    இதனால் ஒவ்வொரு நாற்றுப் பண்ணைகளிலும் ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரையிலான தக்காளி நாற்றுக்கள் வாங்க ஆளில்லாமல் வீணாகியுள்ளது. இதே போல் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக மிளகாய் நாற்றுக்களும் விற்பனையாகவில்லை. 

    வழக்கமான சாகுபடியில் தக்காளி, மிளகாய் சாகுபடி 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. அடுத்து கோடை காலம் துவங்குவதால், காய்கறி சாகுபடி குறைவு காரணமாக அடுத்த 3 மாதத்திற்கு பின் தக்காளி விலை உயர வாய்ப்புள்ளது.

    நாற்றுப்பண்ணைகளில் தக்காளி, மிளகாய் நாற்றுக்கள் விற்பனையாகாததால், பண்ணைக்கு சராசரியாக, ஒரு லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×