search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.
    X
    அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.

    அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டம்

    நேற்றிரவு பணி முடிந்து 2பேரும் தங்கள் கிராமத்திற்கு செல்வதற்காக பழனி வரை செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வட்டமலை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆலையில் தாராபுரத்தை அடுத்த கொல்லப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி, ஈஸ்வரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். 

    நேற்றிரவு பணி முடிந்து 2பேரும் தங்கள் கிராமத்திற்கு செல்வதற்காக பழனி வரை செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். இந்தநிலையில் பஸ் டிரைவர், பயணிகள் இறங்க வேண்டிய தேர்பட்டி பிரிவில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் இருவரும் தங்கள் கிராமத்தின் அருகே பேருந்தை நிறுத்து மாறு கூச்சலிட்டனர்.

    ஆனால் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டும்தான் நிறுத்துவோம் எனக்கூறி தேர்பட்டி பிரிவில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம் தள்ளி உள்ள மணக்கடவு என்ற இடத்தில் பெண்கள் இருவரையும் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

    தங்களுக்கு ஏற்பட்ட இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் பழனியில் இருந்து திரும்பவும் ஈரோடு நோக்கி அதே பேருந்து திரும்பி வந்தபோது 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்பட்டி பிரிவில் திரண்டு நின்று சம்பந்தப்பட்ட பேருந்தை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    கிராமமக்களின் திடீர் சாலை மறியல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவத்தால் பழனியில் இருந்து ஈரோடு திருப்பூர் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே ஸ்தம்பித்து நின்றன.

    இந்தசம்பவம் பற்றி தகவல் அறிந்த தாராபுரம் மற்றும் அலங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், பல ஆண்டுகளாக தங்களது கிராமத்தில் எந்த பேருந்தும் நின்று செல்வதில்லை. இதனால் தங்கள் கிராமத்தை சேர்ந்த தினக்கூலியாக செல்லும் விவசாய தொழிலாளர்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 

    எனவே அரசு தலையிட்டு தங்களது கிராமத்திற்கு செல்லும் சாலை பிரிவுகளில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்றனர். தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×