search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவினாசி கல்லூரியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்

    கடந்த முறை கொரோனா பரவலின் போது ஆக்கிஜன் வசதியுடைய படுக்கைகள் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நபர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இது தவிர 2 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாநகராட்சி பகுதியில் மைய அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது.

    மேலும் 4 மண்டலங்களிலும் தலா ஒரு வழிகாட்டுதல் மற்றும் தொற்று கண்டறியும் மையம் காலை முதல் மாலை வரை இயங்குகிறது. மேலும், திருப்பூர் சேவா சமிதி, நஞ்சப்பா பள்ளி, சிக்கண்ணா கல்லூரி ஆகியன கொரோனா சிகிச்சை வார்டுகளாக, படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் கடந்த முறை கொரோனா பரவலின் போது ஆக்கிஜன் வசதியுடைய படுக்கைகள் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டன. தற்போது இம்மையம் அதே பயன்பாட்டுக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மையம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் துவங்கியுள்ளன. மேலும் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ., வளாகமும் சிகிச்சை மையத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் ஆகியோர்  ஐ.டி.ஐ., வளாகத்தில் சென்று மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொற்று பாதிப்பு அதிகரித்து கூடுதல் படுக்கைகள் தேவைப்படும் நிலையில் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அவிநாசி மகாராஜா கல்லூரியில் 250 படுக்கை கொண்ட கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 22 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதன் முறையாக, இக்கல்லூரிஅருகேயுள்ள பிருத்வி கல்லூரியில் 100 படுக்கை கொண்ட சித்தா வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் உத்தரவில், கலெக்டர் வினீத் ஆலோசனையின்படி சித்தா கோவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

    மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் தலைமையில், மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர். இங்கு சிகிச்சை பெறுவோருக்கு மூலிகை தேநீர், நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், சித்த மருத்துவ, உள் மருந்து சிகிச்சைகள், ஆவி பிடித்தல், நசியம், சுவாச பயிற்சி, யோகாசன பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை தவிர்க்கும் தியான பயிற்சி போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

    சிகிச்சை பெற விரும்பு வோர் நியமன அலுவலர் டாக்டர் யாகசுந்தரம் (7339338027) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 3  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×