search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    குடியரசு தினம் என்றால் என்ன?

    நாடு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26-ந் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மந்திரி சபை முடிவு செய்தது.
    வாணிபம் செய்யும் நோக்கத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல கடலோர பகுதிகளில் தடம் பதித்தனர். பின்னர் அவர்கள் படிப்படியாக இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இந்தியாவை ஆண்டதுடன், கிழக்கிந்திய கம்பெனியை அமைத்து இந்தியாவின் வளங்களை சுரண்டினர். இதை கண்டு கொதித்தெழுந்த இளைஞர்கள் பலர் சேர்ந்து “1857 இந்திய கலகம்” என்ற இயக்கத்தை உருவாக்கினர். இதுவே “முதல் இந்திய சுதந்திர போர்” என்று அழைக்கப்பட்டது. ஒரு ஆண்டு போராட்டத்துக்கு பின்னர் இந்த இயக்கத்தை ஒடுக்கி அதன் தளபதியை நாடு கடத்தி முகலாய வம்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் ஆங்கிலேயர்கள்.

    அதன் பிறகு நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. மேலும் ஒருபுறம் மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை வழி போராட்டங்களும், மற்றொரு புறம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் போன்றவர்களின் தலைமையில் ஆயுத போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

    இதனிடையே நாட்டு மக்களிடையே ‘ஜெய்ஹிந்த்‘ என்ற வார்த்தை தேசிய உணர்வைதட்டி எழுப்பியது. சுதந்திர போராட்டத்தின்போது இந்த வார்த்தையை உச்சரிக்கும்போது, மக்களின் சுதந்திர தாகம் அதிகரித்தது. இதனை முதன் முதலில் இந்த தேசத்துக்கு உரக்க கூறியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் 1941-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி ஜெர்மனியில் ‘சுதந்திர இந்தியா மையம்‘ என்ற அமைப்பை தொடங்கினார். அதன் தொடக்க விழாவில் தான் நேதாஜி, தேசிய உணர்வை தட்டி எழுப்பும் ‘ஜெய்ஹிந்த்‘ (வெல்க இந்தியா) என்ற கோஷத்தை முழங்கினார். அப்போது முதல் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களிடமும் இது வாழ்த்தாக ஒலித்தது.

    இந்தியர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக இந்தியாவை விட்டு வெளியேற ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.

    அப்போது கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி ஆங்கிலேயர் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன் பின் இந்திய அரசியலமைப்பு 1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அதுதான் குடியரசு தினம்.

    சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க மாமேதை அம்பேத்கர் தலைமையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு அதே ஆண்டு நவம்பர் மாதம் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறியும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னர் 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி பாராளுமன்றத்தில் அந்த சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

    நாடு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26-ந் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மந்திரி சபைமுடிவு செய்தது. அதன்படி 1950-ம் ஆண்டு முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

    தலைநகர் டெல்லியில், குடியரசு தலைவர் மூவர்ண கொடியை ஏற்றி இந்திய படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். மாநிலங்களில், அந்தந்த மாநில கவர்னர் தேசிய கொடியேற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் வீரதீர செயல்புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார்.


    Next Story
    ×