search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்

    கோவை மாநகராட்சியை கைப்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
    கோவை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கோவையை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருவதால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தற்போதே தயாராக தொடங்கிவிட்டன. உள்ளாட்சி தேர்தலுக்கு தொடர்ந்து அரசியல் கட்சிகள் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை அறிவிக் கும் இறுதி கட்டத்தில் இருக்கின்றனர்.

    கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 அதிமுக எம்.எல்.ஏக்கள், ஒரு பாஜக எம்.எல்.ஏ வசம் இருக்கிறது. இரண்டு மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வசம் உள் ளன.

    இந்தநிலையில் தி.மு.க சார்பாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டு கோவை மக்கள் சபை, ஜல்லிக்கட்டு, சாலைப் பணிகள் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் திமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று அ.தி.மு.க தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகிறது. 

    கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி கள், 33 பேரூராட்சிகள் இருக்கின்றன. மொத்தம் 21.55 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். கோவை மாநகராட்சியில் மொத்த முள்ள 100 வார்டுகளில் 1,216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 

    மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கருமத்தம் பட்டி, காரமடை, மதுக்கரை, கூடலூர், வால்பாறை ஆகிய 7 நகராட்சிகளில் 205 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 33 பேரூராட்சிகளில் 590 வாக்குச்சாவடிகள் என மொத்தம் கோவை மாவட்டத்தில் சுமார் 2000 வாக்குச்சாவடிகள் அமைக்க பட உள்ளது. 

    கோவை மாநகராட்சியில் 100 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடக்கிறது. தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்கள் மறைமுக தேர்தல் மூலம் மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பின் மண்டல குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். 

    மாவட்டத்தில் 7 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 198 கவுன்சிலர் பணியிடங்களுக்கு நேரடி தேர்தலும் அவற்றில் தலா ஒரு சேர்மன், துணை சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில், 513 வார்டுகளுக்கு கவுன்சிலர் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மீதமுள்ள 811 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவியானது பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. ஆதிதிராவிடர் (எஸ்.சி) பொதுப்பிரிவில் 60, 74, 80, 87, 93 ஆகிய ஐந்து வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    எஸ்.சி பெண்களுக்கு  3, 13, 61, 66, 85 என ஐந்து வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 90 வார்டுகளில் 45 வார்டுகள் பெண்கள் (பொது)பிரிவுக்கும், மற்று மொரு 45 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் 7 நகராட்சிகளில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, மதுக்கரை, காரமடை ஆகிய 5 நகராட்சிகளின் தலைவர் பதவிகளும் பெண்கள் (பொது) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

    ஆனைமலை, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, ஒடையகுளம், ஒத்தகால் மண்டபம், சிறுமுகை, சூலூர், திருமலையாம்பாளையம், போளூவாம்பட்டி, தென்கரை, சூளேஸ்வரன் பட்டி, பெரியநெகமம், வீரபாண்டி, எட்டிமடை, கண்ணம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய 16 பேருராட்சிகளின் தலைவர் பதவிகள் பெண்கள் (பொது) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் வேடப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண்கள் (தனி) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அரசுத்துறை அலுவலர்கள், போலீசார் கொண்ட பறக்கும் படையினர் பணி தொடங்க உள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வரும். எந்த ஓட்டுச்சாவடியில் யார் பணியில் இருப்பர் என்று முடிவு செய்வதற்கான ஆட்தேர்வு அதன் பிறகு நடக்க உள்ளதாகவும், புதிய திட்டங்கள், அரசு விழா நடத்தக் கூடாது, உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×