search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமங்கலம் அருகே ஆசிரியர் வீட்டில் 63 பவுன் நகைகள் கொள்ளையடித்தவர் கைது

    திருமங்கலம் கொள்ளை வழக்கில் குற்றவாளியை ஒரு மாதத்திற்குள் பிடித்த தனிப்படை பிரிவு மற்றும் திருமங்கலம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கிறிஸ்டியன் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் திருமாவளவன். இவரது மனைவி எபினேசர். விருதுநகரில் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வங்கியில் அதிகாரியாக உள்ளார்.

    இவர்கள் கடந்த மாதம் 24-ந்தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவிற்காக பொருட்கள் வாங்க குடும்பத்துடன் வெளியே சென்றனர். இதனை அறிந்த யாரோ மர்மநபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 63 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் டிப்-டாப்பாக உடை அணிந்த வாலிபர் வீட்டிற்குள் வந்து செல்வது தெரியவந்தது.

    இதனால் அவன் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர். அந்த உருவத்தை கொண்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் கண்காணிப்பு கேமிராவில் பதிவானவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த முத்துராஜ் என்ற சுஜித் (வயது30) என்பது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். கைதான முத்து ராஜிடம்இருந்து 63 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    முத்துராஜ் கல்லூரி மாணவர் போல உடை அணிந்து முதுகில் பேக் போட்டுக்கொண்டு முக்கிய பகுதிகளில் வலம் வருவாராம். அப்போது பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவது வழக்கம்.

    பின்னர் சரியான நேரம் பார்த்து வீடுகளுக்குள் புகுந்து தனி ஆளாக பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடித்து செல்வார். இவர் மீது திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    63 பவுன் நகைகள் மீட்கப்பட்ட நிலையில் ரூ.1 லட்சம் எங்கு உள்ளது? என போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் முத்துராஜிக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் கொள்ளையடிக்கும் நகைகள் மற்றும் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வைப்பது வழக்கம் என்றும் தெரிகிறது.

    இதன் அடிப்படையில் அந்த பெண்ணை போலீசார் தேடி சென்றனர்.ஆனால் அவர் தலைமறை வாகிவிட்டார். அவரை பிடித்தால் தான் கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணம் இருக்கிறதா? அந்த பெண்ணுக்கு என்ன தொடர்பு என தெரியவரும்.

    திருமங்கலம் கொள்ளை வழக்கில் குற்றவாளியை ஒரு மாதத்திற்குள் பிடித்த தனிப்படை பிரிவு மற்றும் திருமங்கலம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார்.

    அவர் கூறுகையில், நகர் புறங்களில் வசிப்பவர்கள் வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். நகைகள் வைத்திருப்பவர்கள் வெளியில் செல்ல நேரிட்டால் அவற்றை வீட்டில் வைத்து செல்லாமல் வங்கி லாக்கர்களில் வைத்துச்செல்லும் பழக்கத்தை கடைபிடித்தால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடப்பது தவிர்க்கப்படும் என்றார்.

    Next Story
    ×