search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்.
    X
    போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

    சென்னை-புறநகர் பகுதிகளில் 493 இடங்களில் போலீஸ் சோதனை

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 493 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது வாகனங்களில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    சென்னை:

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று போடப்பட்டு இருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால், ஆவடி கமி‌ஷனர் சந்தீப் ராய்ரத்தோர், தாம்பரம் கமி‌ஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

    சென்னை மாநகர பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது.

    இதேபோன்று ஆவடி, தாம்பரம், போலீஸ் கமி‌ஷன் ரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 493 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது வாகனங்களில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

    இந்த சோதனையின்போது உரிய காரணங்கள் இன்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சென்னையில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். துணை கமி‌ஷனர்கள் மேற்பார்வையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் சென்னையில் பல இடங்களில் நேற்று மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் களை கட்டி காணப்பட்டன. இன்று காலையில் சென்னை மாநகர் முழுவதுமே திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்களில் திருமணம் நடைபெற்றது.

    சென்னையில் இன்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று உள்ளன. இந்த திருமண நிகழ்ச்சிகளில் குறைந்த அளவிலேயே பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாரும், அதிகாரிகளும், மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி இருந்தனர்.

    இந்த திருமணங்களுக்கு செல்வதற்காக பலர் அழைப்பிதழ்களுடன் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தனர். அதுபோன்று திருமணத்திற்கு சென்றவர்களை அழைப்பிதழை காட்டி விட்டு செல்லுமாறு போலீசார் கூறினார்கள்.

    இதன்படி இன்று முழு ஊரடங்கு நாளிலும் சிலர் சாலைகளில் அழைப்பிதழை காட்டி பொதுமக்கள் பயணம் செய்ததையும் காண முடிந்தது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100அடி சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். அப்போது தேவையின்றி வெளியில் சுற்றியவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    பல இடங்களில் முக்கிய சாலைகள் முழுமையாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு இருந்தது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்காக சென்ற வாகன ஓட்டிகளும் சில கிலோ மீட்டர் சுற்றியே செல்ல முடிந்தது.

    சென்னையில் 30-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் இன்று சீல் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பாலங்கள் நேற்று இரவு 10 மணியில் இருந்தே மூடப்பட்டு இருந்தது.

    இன்று முழுவதும் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் மூடப்பட்டு இருக்கும். முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு நாளை காலையில்தான் பாலங்கள் மற்றும் முக்கிய சாலைகள் திறக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×