search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வீடுகளில் கருப்பு கொடி கட்டி நாளை போராட்டம்

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையத்தை அடுத்த கானக்காடு பகுதியில் உள்ள தனியார் பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலங்களுக்குபட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு குப்பை கொட்டுவதால் - பாறைக்குழியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு துர்நாற்றம் வீசுவதுடன்  சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் கூறி சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இதே பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அங்கு திருப்பூர் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  இந்த பிரச்சினை தொடர்பாக அம்மாபாளையம் அனைத்து கட்சி நிர்வாகிகள், அனைத்து குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

    இதில் அப்பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதையும் மீறி குப்பை கொட்டுவதை கண்டித்து 24-ந்தேதி அம்மாபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி 36-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×