search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் வெறிச்சோடிய சாலை.
    X
    உடன்குடியில் வெறிச்சோடிய சாலை.

    தூத்துக்குடியில் 64 இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு

    தூத்துக்குடி மாவட்டத்தில் 3-வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி மாவட்டத்தில் மொத்தம் 64 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடந்தது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 3-வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் 1,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 64 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 56 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் தீவிர ரோந்து பணி நடந்தது.

    அப்போது சாலையில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர். ஓட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் வீடுகளுக்கு பார்சல் வாங்கி சென்றனர். தங்களது குடியிருப்புகளுக்கு குறைந்த தூரத்தில் உள்ள கடைகளுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதே நேரத்தில் வழக்கம்போல் இன்றும் வீடுகளுக்கு வந்து உணவு வழங்கிய நிறுவனங்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.

    முழு ஊரடங்கு காரணமாக பரபரப்பாக காணப்படும் தூத்துக்குடி மாநகர பகுதிகளான பிரையண்ட் நகர், சிதம்பரநகர், அண்ணா நகர், பாளை ரோடு, பஸ் நிலையங்கள், மார்க்கெட், வ.உ.சி மார்க்கெட் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டது.

    மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், உடன்குடி, ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.

    உடன்குடி மெயின் பஜார், நாலு சந்திப்பு, பஸ் நிலையம், சத்திய மூர்த்தி பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    குலசேகரன்பட்டினம், பரமன்குறிச்சி பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


    Next Story
    ×