search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள்

    தேனி மாவட்டத்தில் கொரோனா நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து விசாரணை தொடங்க உள்ளது
    தேனி:

    தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கடந்த ஆண்டு மின்னல் வேகத்தில் இருந்தபோது அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நிதியுதவி வழங்கியது. உயிர் காக்கும் மருத்துவ கருவிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் போன்றவற்றுக்கு அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது.


    இது தவிர மாநிலம் முழுவதும் தன்னார்வலர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தங்களால் இயன்ற மருத்துவ உபகரணங்களை கொரோனா நிவாரண பங்களிப்பாக வழங்கி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்துக்கு உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் வாங்க தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியது.

    இது தவிர தேசிய சுகாதார திட்ட நிதியும் பயன்படுத்தப்பட்டது. இதில் ரூ.65 லட்சத்துக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு அறையில் கம்ப்யூட்டரை சரிசெய்ததாகவும், தஞ்சாவூரில் இருந்து அதிக விலைக்கு மருந்து மாத்திரைகள் வாங்கியதாகவும், இன்னும் சில கணக்குகளை காட்டி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் முரளிதரன் குழு அமைத்தார். அந்தக்குழு தமது விசாரணையை கலெக்டரிடம் அளித்தனர். அதில் முறைகேடு நடந்தது உண்மை என தெரியவரவே இந்த  அறிக்கையை கலெக்டர் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ளார்.

    இந்த முறைகேடுகள் அனைத்தும் கொரோனா உச்சத்தில் இருந்த 2021 மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் நடந்துள்ளது. அப்போது மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனராக ரமேஷ்குமார், தேசிய சுகாதார திட்டத்தில் மனோஜ்குமார் ஆகியோர் பணியாற்றினர்.

    இவர்கள் தற்போது வேறு மாவட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். உதவியாளராக இருந்த ரவி, கண்டமனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கலெக்டர் அறிக்கைக்கு தமிழக அரசின் உத்தரவு கிடைத்தவுடன் ஓரிரு நாளில் இது குறித்த விசாரணை தொடங்கி விடும்.

    அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. கொரோனா காலக்கட்டத்தில் உயிர் பிழைப்போமா என்ற அச்சத்தில் மக்கள் இருந்த நிலையிலும் அரசு நிதியில் லட்சச்கணக்கில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×