search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இந்து முன்னணி சார்பில் அறப்போராட்டம் - மாநில தலைவர் அறிக்கை

    மாணவியின் மரணத்திற்கு கட்டாய மதமாற்றம் காரணமில்லை என்று அறிவித்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
    திருப்பூர்:

    அரியலூர் மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கட்டாய மதமாற்ற தொல்லைக்கு ஆளாகியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டஅரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தை சேர்ந்த மு.லாவண்யா என்ற மாணவியின் இழப்பு அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல தமிழக இந்துக்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

    மரணத்திற்கு முன்பான மாணவியின் வாக்குமூலம் வெளியானநிலையில் லாவண்யாவின் மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர்களும், பொதுமக்களும் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காவல்துறை அந்த பள்ளியின் வார்டன் சகாயமேரியை மட்டும் கைது செய்ததுடன் மாணவியின் மரணத்திற்கு கட்டாய மதமாற்றம் காரணமில்லை என்று அறிவித்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

    ஆகவே இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட  கன்னியாஸ்திரிகள் இருவரையும், பள்ளியின் பாதிரியாரையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். 

    மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் கைதுசெய்து அதிகபட்ச தண்டனையை வழங்கக்கோரி நீதிகேட்டு தமிழகம் முழுவதும் மக்களை ஒன்றுதிரட்டி இந்துமுன்னணி சார்பில் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமும், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்து அன்னையர் முன்னணி சார்பில் நீதிகேட்டு விளக்கேந்தி போராட்டமும், 27-ந்தேதி (வியாழக்கிழமை) இந்து இளைஞர் முன்னணி சார்பில் உயிர்குடிக்கும் கட்டாய மதமாற்றம் செய்யும் கல்வி நிலையங்கள் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×