search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    இந்திய ஆட்சிப் பணி விதி எண்.6-ல் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்- கமல்ஹாசன்

    இந்திய ஆட்சிப் பணி விதி 6-ல் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை 1954-ன் இந்திய ஆட்சிப் பணி விதி 6-ன் புதிய திருத்தம் வழங்குகிறது.

    இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்டிருந்தது. மத்திய அரசு நடைமுறைப்படுத்த நினைக்கும் இந்தப் புதிய திருத்தம் மாநில அரசின் உரிமைக்கு முற்றிலும் எதிரானது.

    தற்போதைய சட்ட நடைமுறைப்படி மாநிலங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு அழைக்க விரும்பும் பட்சத்தில், அதற்கு மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெறுவது அவசியமானதாகிறது.

    ஆனால், மத்திய அரசு கொண்டுவரும் திருத்தத்தின் மூலம் மாநில அரசின் அனுமதியோ அல்லது ஒப்புதலோ இன்றி மத்திய அரசுப் பணிகளுக்கு மாநில அரசு அதிகாரிகளை உடனடியாக மாற்றிவிட முடியும். இது நிர்வாக ரீதியாக மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும், குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடிய ஒன்று.

    அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவும் இது அமையக்கூடும் என்பதற்கு மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளருக்கு ஓய்வு பெறும் நாளன்று நடந்த சம்பவமே சான்று.

    மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் நிர்வாகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றும் நாட்டில், மாநில அரசின் உரிமைகளை அர்த்தமற்றதாக்கும் இது போன்ற திருத்தங்களை அமல்படுத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது. இந்தக் கேடர் விதி திருத்த நடவடிக்கையின் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு தனதாக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளின் பணி ஆரோக்கியத்திற்கும் இது உகந்தது அல்ல.

    இந்திய ஆட்சிப் பணி விதி 6-ல் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுகளுடனான உறவில் விரிசல் நிகழ வழிவகுக்கும் இதுபோன்ற முயற்சிகளை ஆளும் பா.ஜ.க. அரசு விட்டொழிக்க வேண்டும்.

    மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சூழலில், தமிழக அரசும் இத்திருத்தத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டையும் எதிர்ப்பையும் வலுவாகப் பதிவு செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×