search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கட்டிடங்களுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டிய காட்சி.
    X
    புதிய கட்டிடங்களுக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டிய காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் இதுவரை 3,150 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்-சபாநாயகர் அப்பாவு பேட்டி

    நெல்லை மாவட்டத்தில் இதுவரை 3,150 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மாநக ராட்சி சுகாதார பணியாளர் களுக்கு பேட்டரி வாகனம் வழங்கும் விழா உள்ளிட்டவை இன்று நடைபெற்றது.

    இதன் தொடக்க விழாவாக மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு, பாளை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வகாப் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர பகுதியில் உள்ள 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் கட்டிடங்கள் மற்றும் பிற பணிகளுக்காக ரூ.9.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலத்தில் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு குப்பைகள் அள்ளுவதற்கு பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு பணியாளர் களுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கினார்.

    இந்த பணியாளர்களுக்காக ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் 84 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்கள் ஆர்வமுடன் போட்டு வருகிறார்கள். இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 82 சதவீதம் பேரும், 2-ம் தவணையை 52 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர்.

    15 முதல் 18 வயது உடையோருக்கு 27 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி 6,614 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள். இதில் 3,150 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×