search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    சொத்துதகராறில் தொழிலாளியை படுகொலை செய்த 4 பேர் கைது

    பெரியகுளத்தில் சொத்து தகராறில் தொழிலாளியை வெட்டி கொலை செய்த சித்தி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் செந்தில் (50). இவர் அங்குள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி. முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
     
    சிங்காரவேலுவின் முதல் மனைவி ராஜம்மாள் இவரது மகன் செந்தில். ராஜம்மாள் கோபித்துக் கொண்டு வெளியூர் சென்று விட்டதால் சிங்காரவேலு ரத்தினகிரி என்பவரை 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு செல்வக்குமார் (42), சரவணன் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.

    சிங்காரவேலுவின் நடத்தை சரி இல்லாததால் அவரது தாத்தா தனது பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் செந்தில் பெயரில் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார்.

    ஆனால் செந்தில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டதாலும், திருமண மாகவில்லை என்பதாலும் அவரது பெயரில் இருந்த சொத்துக்களை ரத்தினகிரி மற்றும் அவரது மகன்கள் அனுபவித்து வந்தனர்.
     
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய செந்தில் தனது பெயரில் உள்ள நிலத்தை ரூ.4 லட்சத்துக்கு விற்றுள்ளார். அந்த தொகையில் தங்களுக்கு சிறிது கொடுக்குமாறு ரத்தினகிரி கேட்டுள்ளார். ஆனால் செந்தில் தர மறுத்தார்.

    இவர் உயிருடன் இருந்தால் தனக்கு சொத்துகள் கிடைக்காது என்று நினைத்து அவரை தீர்த்து கட்ட அக்குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு செந்திலுக்கு செல்வக்குமார் மற்றும் லோகநாதன், செல்வம் ஆகியோர் மது வாங்கி கொடுத்துள்ளனர்.

    அதன் பிறகு அசைவ உணவு கொடுத்து அவரை நன்றாக சாப்பிட வைத்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் மயங்கி கிடந்த செந்திலை செல்வக்குமார் வெட்டி கொலை செய்தார்.

    தடயங்களை மறைக்க அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரிக்க முடிவு செய்தனர். அதன் பேரில் அங்குள்ள குப்பைத் தொட்டிக்கு அவரது உடலை தூக்கி வந்து போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். ஆனால் உடல் முழுவதும் எரிவதற்குள் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டனர்.

    மேலும் கொலையாளிகள் 4 பேரையும் கைது செய்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கு ஏற்ப சொத்துக்காக தொழிலாளியை அவரது குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×