search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டோல்கேட்
    X
    டோல்கேட்

    கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு இலவச அனுமதி இல்லை

    கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு இலவச அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் 4 வழிச்சாலையில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இந்த டோல்கேட் ஆரம்பிக்கப்படும் சமயத்தில் திருமங்கலம் நகர் எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்ததால் அதனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி திருமங்கலம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

    இதனையடுத்து திருமங்கலம் நகர் எல்லைக்கு மிகவும் அருகில் விதிகளுக்கு முரணாக கப்பலூர் டோல்கேட்டில் அமைக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அப்போது மக்களின் கடுமையான எதிர்ப்பினை சமாளிக்கும் வகையில் திருமங்கலம் நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 208 பணிக்கு டி.கல்லுப்பட்டி-பேரையூர் பகுதியில் உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளித்து இலவச பயணம் செய்ய அன்றைய டோல்கேட் ஒப்பந்ததாரர் ஒத்துழைப்புடன் அனுமதி அளித்தது.

    கப்பலூர் டோல்கேட் ஆரம்பித்த நாள் முதல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகனங்களுக்கு இலவச அனுமதி கிடைத்து வந்த நிலையில் தற்போது கப்பலூர் டோல்கேட்டில் 30 ஆண்டுகளுக்கு புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள நிர்வாகம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த வாகனங்களை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் ஆவணங்களை சரிபார்ப்பதும், கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதும் தற்போது தொடர்கதையாகி வருகிறது. 

    சமீபத்தில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் மற்றும் கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர், கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் மறு உத்தரவு வரும் வரையில் திருமங்கலம் பகுதியை சேர்ந்த உள்ளூ1ர் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட்டில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் திருமங்கலம் பகுதியை சேர்ந்த உள்ளூர் வாகனங்களுக்கு இனிமேல் இலவச அனுமதி கிடையாது என்றும், கப்பலூர் டோல்கேட்டில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள உள்ளூர் வாகனங்கள் சலுகையுடன் கூடிய பாஸ்டேக் அல்லது மாதாந்திர பாஸ் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்து டோல்கேட்டில் இருபுற நுழைவு வாயில்களிலும் புதிதாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளது.

    கப்பலூர் டோல்கேட்டில் இந்த திடீர் முடிவு திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் நகர எல்லையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் டோல்கேட் தங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. 

    எனவே திருமங்கலம் பகுதி மக்களுக்கு  இடையூறாக உள்ள கப்பலூர் டோல்கேட்டில் வேறு இடத்திற்கு மாற்ற விரைவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×