search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடம்பூர் ராஜூ
    X
    கடம்பூர் ராஜூ

    சோதனை என்பது தி.மு.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும் என கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ராஜகுமார் வரவேற்று பேசினார். இதில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. தேர்தலில் தி.மு.க.வினர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை முதல்-அமைச்சர் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால் 90 சதவீதம் பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

    தி.மு.க.வினரிடம் சொத்து மதிப்பில் கால்வாசி கூட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களிடம் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எதிர்கட்சியாக இருந்த போது பல்வேறு வன்முறைகள், அடங்கு முறைகளை சந்தித்து வளர்ந்த கட்சி அ.தி.மு.க. எனவே அ.தி.மு.கவை யாராலும் அசைக்க முடியாது.

    பொங்கல் பரிசு தொகுப்பில் பல பொருட்கள் காணாமல் போனது மட்டுமின்றி, தரமில்லாத பொருள்களை வழங்கி உள்ளனர். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லும் தி.மு.க. அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இந்தி இடம் பெற்றது எப்படி. அத்துணையும் வெளி மாநிலங்களில் வாங்கி உள்ளனர்.

    தமிழகத்தில் வெல்லம் வாங்கி இருந்தால் இங்குள்ள உற்பத்தியாளர்கள் பயன்பெற்று இருப்பார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×