search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    பனியன் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில் ஆடை உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்திய தையடுத்து, டிசம்பர் மாதம் ரூ.10 குறைக்கப்பட்டது.
    திருப்பூர்:

    ஆடை உற்பத்திக்கு பிரதான மூலப்பொருளான பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதை பின்பற்றி தமிழக நூற் பாலைகள் ஒசைரி நூல் விலையை மாதம் தோறும் உயர்த்தி வருகின்றன. 

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில் ஆடை உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்திய தையடுத்து, டிசம்பர் மாதம் ரூ.10 குறைக்கப்பட்டது. 

    இந்தநிலையில் இம்மாதம் மீண்டும் கிலோவுக்கு நூல் விலை ரூ. 30 உயர்த்தப்பட்டது. தொடரும் நூல் விலை உயர்வு திருப்பூர் பின்னலாடை துறை யினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே நூல் விலை உயர்வுக்கு காரணமான பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என திருப்பூர் தொழில் அமைப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். கடந்த 17,18-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டமும் நடத்தினர். 

    இந்தநிலையில் பனியன் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், நூல், பருத்தி, மின்சாரத்திற்கு மானியங்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தொழில் பிரிவு சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

    அதன்படி இன்று காலை 8 மணிக்கு திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகே உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. போராட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். 

    மாநில செயலாளர் மலர்கொடி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் காடேஸ்வரா தங்கராஜ், கதிர்வேல்,மாநில தொழிற்சங்க செயலாளர்கள் ரவிகுமார், ராஜாமாணிக்கம், மாநில இளைஞரணி துணை தலைவர் சிவசங்கரி உள்பட  நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    இதில் நிர்வாகிகள் பேசியதாவது:

    லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமான பனியன் தொழில் வரலாறு காணாத கடுமையான நூல் விலை ஏற்றத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதை போக்கும் விதமாக நூல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50 மானியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கி பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும். 

    பனியன் தொழிலின் மூலப்பொருளான பருத்தி விவசாயத்தை அதிகரிக்கும் விதமாக விவசாயிகளுக்கு மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் கொடுத்து போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 

    விண்ணைத்தொடும் வகையில் நூல் விலை ஏற்றம் இருப்பதால் பனியன் தொழில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எனவே வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பஞ்சை அரசே நேரடியாக கொள்முதல் செய்து அடக்க விலைக்கே நூற்பாலை நிறுவனங்களுக்கு வழங்க, தனியாக ஒரு அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தி தொழிலை பாதுகாக்க வேண்டும்.

    கடந்த சில மாதங்களாக கடுமையாக நூல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களின் சிரமத்தை குறைக்கின்ற விதமாக சிறு குறு தொழில் நிறுவனங்களின் மின்சார கட்டணத்தில் 30 சதவீதம் தமிழக அரசு மானியம் வழங்கி தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்றனர். 
    Next Story
    ×