search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்புழு பயிற்சி நடந்த காட்சி.
    X
    மண்புழு பயிற்சி நடந்த காட்சி.

    கோவில்பட்டியில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

    மண்புழு உரம் மற்றும் மண்புழு குளியல் நீர் உற்பத்தி குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மண்புழு உரம் மற்றும் மண்புழு குளியல் நீர் உற்பத்தி குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்திய வேளாண் வானிலை ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்ற இம்முகாமை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாஸ்கர்   தொடங்கி வைத்துபேசுகையில், 

    இயற்கை விவசாயத்தில் மண்புழுக்களின் பங்கு, மண்புழுக்களின் வகைகள், அவற்றின் பண்புகள், மண்ணின் வளத்தை நிர்ணயிப்பது மண்புழுக்களே, மண் புழுக்கள் விவசாயிகளின் நண்பன், மண்ணின் மைந்தன் என கூறினார். தொடர்ந்து, மண்புழு உரம் மற்றும் குளியல் நீர் பற்றிய தொழில்நுட்ப கையேட்டை அவர் வெளியிட்டார்.

    உதவி பேராசிரியர் சுதாகர், மண்புழுக்களை எளிமையான முறையில் சேகரிப்பது பற்றியும், அவற்றை வளர்க்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்கமளித்தார். மண்புழு உரம் தயாரிப்பதற்கு ஏற்ற மண்புழு ரகங்களையும், மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்வது பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    பேராசிரியை சுப்புலட்சுமி மண்புழுக்கள் மண்ணின் அரிமானத்தை தடுத்து, நீர்வளத்தை அதிகரிக்கக் கூடிய முக்கிய காரணி என்றும், மண்புழு உரத்தின் சத்துக்களையும், அவற்றால் பயிர் மகசூல் அதிகரிப்பது பற்றியும் விளக்கிப் பேசினார்.

    பேராசிரியை ஆர்த்தி ராணி மண்புழுக்களை பாதிக்கக் கூடிய காரணிகளை பற்றியும், மண்புழுக்களை வளர்ப்பதற்கேற்ற வானிலை காரணிகள் பற்றியும் பேசினார்.

      விவசாயிகள் கலந்து கொண்டு, மண்புழு உரம் தயாரிப்பதற்குரிய சில்பாலின் பைகள், நிழல் வலைகள் மற்றும் மண்புழுக்கள் ஆகியவற்றை இலவசமாக பெற்றுக் கொண்டு பயன் பெற்றனர்.
    Next Story
    ×