search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனருக்கு கொரோனா தொற்று

    கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
    கோவை:

    கோவை மாவட்டத்தில் 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தினசரி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    நேற்று ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி, 68 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது முதியவர் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

    நேற்று ஒரே நாளில் சிகிச்சை பெற்ற 1,189 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது 15,926 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கோவை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு தொடர்ச்சியாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுவரை மாநகரில் மட்டும் 80&க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

    கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றுபவர் செந்தில்குமார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் மற்றும் இருமலுடன் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.  இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    இதனையடுத்து துணை கமிஷனர் செந்தில்குமார் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி யாக பணியாற்றி வரும் கீதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    மேலும் கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

    கோவை குட்செட் ரோட்டில் ரெயில்வே போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும்  ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 ஏட்டுகள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் போலீஸ் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.  
    Next Story
    ×