search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை விவசாயிகள் கவலை

    தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தங்கும் வெள்ளை நிறத்திலான நுண்ணிய ஈக்கள், அவற்றின் சாற்றை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பிரதானமாக உள்ள தென்னை சாகுபடி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். 

    பருவ மழை முடிந்து பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் தென்னை மரங்களை தாக்கி அதிவேகமாக பரவி வரும் வெள்ளை ஈ தாக்குதல் விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது.

    தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தங்கும் வெள்ளை நிறத்திலான நுண்ணிய ஈக்கள், அவற்றின் சாற்றை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவை நூற்றுக்கணக்கில் முட்டையிடுவதோடு 30 நாட்களில் அபரிமிதமாக பெருகி, பச்சையத்தை உறிஞ்சி ஓலையின் மீது பூஞ்சாணம் போல் படிந்து விடுகிறது.

    தென்னை மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய வழியில்லாமல், மகசூலும், மரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஓலைகள் பாதித்த நிலையில் தற்போது தென்னங்குருத்து மற்றும் பாலைகளையும் பதம்பார்த்து வருகிறது. வெயில் அதிகரிக்க, அதிகரிக்க ஈக்கள் பரவுவதும் அதிகரித்து உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் பெரும்பாலான தென்னந்தோப்புகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

    அதிலும் குட்டை ரக தென்னை மரங்கள், இளநீர் மரங்களிலும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால் கடந்த சில மாதங்களாக பாதிப்பை சந்தித்து வரும் விவசாயிகள் தற்போது வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை விவசாயத்தை காப்பற்ற போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


    இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது :-
    தென்னை மரங்களுக்கு கீழ் களைக்கொல்லி அடிப்பதால், இயற்கை எதிரிகள் இல்லாத நிலையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிவேகமாக பரவி வருகிறது. 

    இத்தாக்குதல் தென்பட்டால் நீரை வேகமாக பீய்ச்சியடித்தால் அவை கீழே விழுந்து இறந்து விடும்.மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள், ‘என்கார்சியா’ ஒட்டுண்ணி, வேளாண் பல்கலை பூச்சியியல் துறையில் உற்பத்தி செய்யப்படும் ‘கிரைசோபிட்’ எனும் இரை விழுங்கிகளை, ஏக்கருக்கு 20 எண்கள் வீதம் மரத்தினால் ஆன தட்டி வைத்து, விளக்கெண்ணெய், வேப்பெண்ணை ஆகியவற்றை  மஞ்சள் நிற பாலித்தீன் கவர்களில் தெளித்து கட்டினால் அவற்றில் ஈர்க்கப்பட்டு, ஈக்கள் ஒட்டி விடும்.கிரீஸ் மற்றும் விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை பயன்படுத்தி  இப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

    இரவு நேரங்களில் விளக்குப்பொறிகளை அமைத்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து உயர் அதிகாரிகள் வழியாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒட்டுப்பொறி உள்ளிட்ட இடு பொருட்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×