search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம்

    சென்னையில் 1,600 இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2-வது தவணை காலம் கடந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா சிறப்பு முகாம்கள் மூலம் இந்த இலக்கை அடைய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சனிக்கிழமைகளில் நடந்து வந்த சிறப்பு முகாம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தில் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. பின்னர் மீண்டும் கடந்த 8-ந்தேதி சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடந்தன.

    15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதால் அன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை. அதையடுத்து நாளை (சனிக்கிழமை) வழக்கம்போல் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

    இன்னும் 90 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் இருப்பதால் அவர்களை இந்த முகாம்களுக்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்துவதில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டுகிறது. நேற்று 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    தடுப்பூசி


    நேற்று வரையில் முதல் தவணை 5 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரத்து 10 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது 88.94 சதவீதம் ஆகும். 2-வது தவணை தடுப்பூசி 3 கோடியே 75 லட்சத்து 51 ஆயிரத்து 526 செலுத்தப்பட்டுள்ளது. இது 64.87 சதவீதம் ஆகும். தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கி உள்ளது. வயதானவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    சென்னையில் 1,600 இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2-வது தவணை காலம் கடந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலேயே முகாம்கள் நடைபெறுவதால் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×