search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து முன்மாதிரி கிராம விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து முன்மாதிரி கிராம விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     தமிழக அரசு சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ‘’முன்மாதிரி கிராம விருது “ தோற்றுவிக்கப்பட்டுள்ளது .

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் “முன் மாதிரி கிராம விருது” வழங்கி கவுரவிப்பதுடன் விருதிற்கான கேடயமும் ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

    11 மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன்மாதிரி கிராம விருது வழங்கி அதற்கான கேடயமும், தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என தெரிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.

    விருதுக்கான தகுதிகள் கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் கழிப்பறையை பயன்படுத்துவதுடன் , கழிப்பறைகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும். சமுதாய சுகாதார வளாகப்பயன்பாடு முழுமையான அளவில் இருக்க வேண்டும்.

    கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடிகள், ஊராட்சி அலுவலகம், கிராம வறுமை ஒழிப்புச் சங்க கட்டிடம் மற்றும் பொது இடங்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையம், பொது சந்தை ஆகிய இடங்களில் 100 சதவீத கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கிராம அளவிலும், வீடுகளிலும் திடக்கழிவுகள், மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

    மட்கும் குப்பைகளை வீடுகளில் தனிநபர் உரக்குழி அமைத்தும், சமுதாய அளவில் உரமாக்கல், யுக்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நெகிழி கழிவு பயன்பாட்டை தடைசெய்யும் விதத்தில் கிராம சபாவில் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    முறையாக திரவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் தொடர்பான யுக்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு செய்திகள் பொது இடங்களில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
    மேற்கண்ட அடிப்படை தகுதியுடைய ஊராட்சிகள் வட்டார அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தலைமையிலான குழு ஊராட்சியினை பார்வையிட்டு பரிந்துரை செய்யவும், அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட ஊராட்சிகளை கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு ஆய்வு மேற்கொண்டு இரு ஊராட்சிகளை தேர்வு செய்து மாநில அளவிலான குழு தேர்விற்கு பரிந்துரை செய்யப்பட்டு,

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் தலைமயிலான குழு தேர்வுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். எனவே இந்த விருதிற்கு தங்களது கிராம ஊராட்சிகளை தயார் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×