search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு- நாளை முதல் கலந்தாய்வு

    எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27ம்தேதி தொடங்கி படிப்படியாக நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    மருத்துவ மேற்படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.டி., எம்.எஸ்.  போன்ற மேற்படிப்புகளுக்கான மொத்த இடங்கள் 2216. இதில், அகில இந்திய ஒதுக்கீடு 1053, மாநில ஒதுக்கீடு 1163 ஆகும். இதில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவு 23ம் தேதி வெளியிடப்படும்.

    மாநில ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாளை காலை முதல் கலந்தாய்வுக்கான முன்பதிவு தொடங்குகிறது. 1163 இடங்களுக்கான கலந்தாய்வு நாளையில் இருந்து முறையாக தொடங்கி வைக்கப்படுகிறது.

    இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்புகளில், அரசு மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள், சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு படிப்படியாக நடைபெற உள்ளது. 24ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 29ம் தேதி 15 சதவீதத்திற்கான அகில இந்திய ஒதுக்கீடு முடிவு வர உள்ளது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே, 27ம் தேதி கலந்தாய்வு நடைமுறை தொடங்குகிறது. மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளை உள்ளடக்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 27ம் தேதி நடைபெறும். 

    28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் 436 உள்ளன. இதற்கான கலந்தாய்வு ஜனவரி 28 மற்றும் 29ல் நடக்கும். இந்த கலந்தாய்வு சமூக இடைவெளியை பின்பற்றி நேரடியாக நடத்தப்படும். அதன்பின்னர் 30ம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் பொது கலந்தாய்வு தொடங்கி  நடைபெறும்.

    பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளின் மூலம் அரசுக்கு நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ள இடங்கள் 1930. இந்த இடங்களுக்கும் ஜனவரி 30ம் தேதியில் இருந்து கவுன்சிலிங் நடக்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×