search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணி
    X
    தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணி

    கர்நாடகாவிற்கு நீதி கேட்டு தமிழக காவிரி விவசாயிகள் பேரணி

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரிலிருந்து மேகதாது அணை கட்டும் பகுதி வரை நீதிகேட்டு பேரணி மேற்கொண்டனர்.
    திருவாரூர்:

    மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு வரைவுத் திட்ட அறிக்கை 
    தயார் செய்து செய்ய கொடுத்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் 
    பெற்றிட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சூழ்ச்சியை கைவிட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுத்திட அனுமதி தரவேண்டும். மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்தும் பாதயாத்திரை மற்றும் ஆர்ப்பாட்டத்தை 
    தடுத்து நிறுத்திட வேண்டும்.
     
    தமிழகம் ராசி மணலில் அணை கட்ட அனுமதி வழங்கிட வேண்டும் 
    என்ற கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரிலிருந்து மேகதாது 
    அணை கட்டும் பகுதி வரை நீதி கேட்டு பேரணி தொடங்கியது.

    திருவாரூர் கீழவீதியில் உள்ள தேரடி அருகிலிருந்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணி திருவாரூர் முக்கிய வீதிகள் வழியாக ரயில் நிலையம் வந்து அங்கிருந்து வாகனம் மூலம் தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம் வழியாக ஓசூர் சென்று, அங்கிருந்து மேகதாது அணை பகுதிக்கு சென்று இன்று 
    19-ந்தேதி கட்டுமானப் பணிகளை முற்றுகையிட உள்ளனர்.

    திருவாரூரில் நடைபெற்ற இந்த பேரணிக்கு சங்க பொதுச் செயலாளர் 
    பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். விவசாய சங்க பிரதிநிதிகள் தியாகபாரி, பயிரை கிருஷ்ணமணி, வரதராஜன், சுப்பையன், ரெயில் 
    பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழியனுப்பினர்.

    அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    தமிழகத்தை எதிரான உள்நோக்கத்தோடு அரசியலமைப்பு சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கி தமிழகத்தை வறட்சி பிரதேசமாக மாற்றி காட்ட அரசியல் லாப நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடகாவில் மேகதாது 
    அணை கட்ட பேரணி நடத்தப்படுகிறது.

    அதனை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் 
    மேகதாது அணை பகுதியில் முற்றுகையிடுவதற்காக புறப்பட்டு இருக்கிறோம்.
     
    நீதி சொன்ன திருவாரூர் மனுநீதி சோழன் மண்ணிலிருந்து புறப்படும் 
    இந்த வீரம் கொண்ட பயணம் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும்.

    மத்தியில் மோடி அரசு தொட்டிலையும் ஆட்டி, தொடையையும் 
    கிள்ளி விடுகிற பழமொழிக்கேற்ப கர்நாடகாவில் அணை கட்ட 
    அனுமதியும் கொடுத்து நிதி திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதியும் அளித்துள்ளது. அதனை திரும்ப பெற வேண்டும்.

    கர்நாடக அரசு காங்கிரஸ் கட்சி பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெறுகிறது.
     
    காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்துடன் 
    செயல்பட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு போராட்ட களத்திற்கு வரவேண்டும் என கூறினார்.
    Next Story
    ×