search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவியை பிடிக்க தி.மு.க. அதிரடி வியூகம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க அதிக இடங்களில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    திருச்சி:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவி இடங்களுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருசசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாள் முதல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி மேயர் பதவி முதன்முறையாக பொதுப்பிரிவுக்கு மாறியது.

    திருச்சி நகராட்சி கடந்த 1994 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 1996 முதல் 2011 வரை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கே மேயர் பதவி ஒதுக்கப்பட்டது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் அப்போதைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு  மேயர் பதவி அளிக்கப்பட்டு வந்தது. துணை மேயர் பதவியை மட்டுமே தி.மு.க. வகித்துள்ளது.

    இந்த மாநகராட்சியில்  புனிதவள்ளி பழனியாண்டி(த.மா.க.) எமிலி ரிச்சர்ட்(த.மா.க.), சாருபாலா தொண்டைமான்( த.மா.க. பின்னர் காங்கிரஸ்)  எஸ். சுஜாதா(காங்கிரஸ்) ஆகியோர் மேயர் பதவிகளை அலங்கரித்தனர்.

    2011&ல் நடைபெற்ற நேரடி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயா களம் கண்டு வெற்றிவாகை சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வெற்றிவாய்ப்பினை இழந்தது.

    கால் நூற்றாண்டுகளுக்கு பின் ஆண்களுக்கு மேயர் பதவி வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் உடன்பிறப்புகள் ஏக உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்த முறை மேயர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட தொடங்கியுள்ளனர். இதையடுத்து கூட்டணி கட்சிகளிடம் ஏற்கனவே அதிக வார்டுகளில் போட்டியிடும் விருப்பத்தினை அக்கட்சியின் முன்னோடி தலைவர்கள் தெரிவித்து விட்டனர்.

    மொத்தமுள்ள 65 வார்டுகளில் குறைந்த பட்சம் 50 வார்டுகளிலாவது போட்டியிட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போன்று அ.தி.மு.க.வும் மீண்டும் மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

    இருப்பினும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் மேயர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    ஆனால் இரு திராவிட கட்சிகளும் இந்த முறை மேயர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். மேயர் பதவி ரேஸில் ஏற்கனவே துணை மேயர் பதவி வகித்தவர்கள்  வரிசை கட்டி நிற்கிறார்கள். வாரிசுகள் பெயரும் பலமாக அடிபட தொடங்கியுள்ளன.

    எது எப்படி இருந்தாலும் இந்த முறை திருச்சி மாநகராட்சி தேர்தலில் முன்எப்போதும் இல்லாத சூறாவளி வீசுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
    Next Story
    ×