search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை- இடுபொருட்கள்

    திருப்பூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியில் சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது. குறைவான செலவில் தீவனம் தயாரிக்க சோளம் சாகுபடியை தேர்வு செய்கின்றனர்.
    மடத்துக்குளம்:

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம் பாசனத்திற்கு இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

    இப்பகுதிகளில் 2,834 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் தகுந்த இடைவெளி விட்டு 65 நாட்களுக்கு 281 மில்லியன் கன அடி நீர் வரும் 2022 ஏப்ரல் 24-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. 

    தற்போது இப்பகுதிகளில் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ள நிலையில் உடுமலை வேளாண்துறையில் சாகுபடி பருவத்திற்கு ஏற்ற விதை நெல் மற்றும் விதை நேர்த்தி இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    இதுகுறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    கல்லாபுரம் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதி விவசாயிகளுக்கு நெல் சாகுபடி மேற்கொள்ள குறுகிய வயதுடைய ‘கோ 51’ நெல் விதை மற்றும் விதை நேர்த்திக்கு தேவையான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பெவேசியா டிரைகோடெர்மா விரிடி போன்ற இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விதை நேர்த்தி செய்து விதைப்பதால் 25 சதவீதம் தழைச்சத்தை குறைத்துக்கொள்ளலாம். 

    மேலும் கதிர் பருவத்தில் வரக்கூடிய நோய்களையும் கட்டுப்படுத்தப்படுகிறது.நெல் நுண்ணூட்டம் கடைசி உழவின் போது இடுவதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுகிறது.

    எனவே விவசாயிகள் தங்களுக்குத்தேவையான விதை நெல், இடு பொருட்களை விவசாயிகள் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்று பயன்பெறலாம். 

    இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியில் சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது. குறைவான செலவில் தீவனம் தயாரிக்க சோளம் சாகுபடியை தேர்வு செய்கின்றனர். 

    தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவத்தில் கனமழை பெய்ததால்  மானாவாரி சோளப்பயிர் வழக்கத்தை விட உயரமாக வளர்ந்துள்ளது. தை மாதத்தில் இருந்து அறுவடையை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.வேலை உறுதித்திட்ட பணிகளால் விவசாய தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. 

    விவசாயிகளின் இக்கட்டான நிலையை போக்க  வேளாண் பொறியியல் துறை சார்பில் சோளத்தட்டு அறுவடைஎந்திரம் வாடகைக்கு வழங்கும் திட்டம் மீண்டும் துவங்கியுள்ளது. டிராக்டரில்’ பொருத்திய அறுவடை எந்திரம் வாயிலாக ஒரு ஏக்கர் சோளப்பயிரை ஒன்றரை மணி நேரத்தில் அறுவடை செய்ய முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், 

    ஒரு மணிக்கு 400 ரூபாய் வாடகையில் சோளப்பயிர் அறுவடை எந்திரத்தை பயன்படுத்தலாம். திருப்பூர் கோட்டத்தில் 2, தாராபுரம், உடுமலையில் தலா ஒரு எந்திரமும் உள்ளது. சோளப்பயிர் அறுவடை செய்ய வேண்டிய விவசாயிகள்  அந்தந்த உதவி பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்து எளிய முறையில் அறுவடை செய்யலாம் என்றனர்.  
    Next Story
    ×