
இதனையடுத்து பொங்கல் உள்பட பண்டிகை நாட்களில் கோவில்களுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தினர். முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலுக்கு வருடந்தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
அதன்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பழனியை நோக்கி பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
நேற்று தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் அடிவாரத்தில் நின்றபடியே மலைக்கோவிலை பார்த்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு மண்டபங்களில் தங்கி இருந்தனர்.
இன்று காலை நடை திறக்கப்பட்டதும் படிப்பாதை, யானைப்பாதை வழியாக காத்திருந்த பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.
ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க தடுப்புகள் அமைத்து ஆயிரம் பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பிரித்து அனுப்பினர். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர்கள் அங்கேயே தங்க விடாமல் அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தபோதும் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காவடி சுமந்து வந்த பக்தர்கள் அதனை காணிக்கை செலுத்தியபிறகு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைத்து பாதைகளிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு திரண்டதால் மலைக்கோவிலில் கூட்டம் அலைமோதியது.