
இந்து சமயஅறநிலையத் துறைக்கு சொந்தமானவை உள்ளிட்ட அனைத்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
கடந்த 2 வாரங்களாக இந்த நடைமுறை கோவில்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவிலும் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இல்லாமல் தைப்பூச திருவிழா நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலிலும் பக்தர்கள் இல்லாமல் தைப்பூச திருவிழா நடந்தது. ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிறு என 3 தினங்கள் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தைப்பூச திருவிழாவில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். 5 நாட்கள் தரிசனத்துக்கு தடை பற்றி அறியாத ஏராளமான வெளிமாநில பக்தர்கள் ராமேசுவரம் பகுதியில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் 5 நாட்கள் தடை இன்று முடிவுக்கு வந்தது. இதனால் பக்தர்கள் அனைவரும் வழக்கம்போல் இன்று கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 5 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் இன்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ராமேசுவரத்தில் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டனர். அதன் பின்பு காசிக்கு இணையாக கருதப்படும் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர். பின்னர் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் ராமேசுவரத்தில் இன்று திரண்டனர். இதனால் ராமேசுவரம் நகர் முழுவதும் இன்று பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.