search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிலையம்
    X
    பஸ் நிலையம்

    அடிப்படை வசதிகள் இல்லாத ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்களும், பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ராமநாதபுரம்

    வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்ருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் வழியாக ராமேசுவரம் வந்து செல்கின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பிற புண்ணிய தலங்களான தேவிபட்டினம், சேதுக்கரை, திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை செல்பவர்களும் ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் வந்து செல்கின்றனர்.

    மாவட்டத்திலுள்ள பிற ஊர்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் வணிகம், கல்வி, மருத்துவ தேவைக்காக செல்பவர்களும் இந்த புதிய பஸ் நிலையம் வழியாக வந்து செல்கின்றனர்.  ஆனால் இந்த புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. பஸ்சுக்காக வரும் பயணிகள் அமருவதற்கு போதுமான இருக்கை வசதிகள் இல்லை.

    இந்த பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறிப்பாக முதியவர்கள், பெண்கள் பஸ்சுக்காக காத்திருக்கும்போது நீண்டநேரம் அமருவதற்கு இடமின்றி கால் வலிக்க நிற்பதை காணமுடிகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் டிரைவர்கள், கண்டக்டர்கள் அமரவோ, ஓய்வு எடுக்கவோ கழிப்பறை செல்லவோ எந்த வசதியும் இல்லை. பயணிகள் பயன்படுத்தும் கழிவறையையே பயன்படுத்த வேண்டிய அவல நிலை யும், காத்திருக்கும் அவல நிலையும் உள்ளது.  

    இங்குள்ள கழிப்பறைகள் போதுமான பராமரிப்பின்றி, சுகாதாரமின்றி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, குளியலறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 

    இந்த பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறைகள் இல்லாததால்  பயணிகள் சுற்றுச்சுவரை, பஸ் நிலைய வளாகத்தை சுற்றி சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். மக்கள் சிறுநீர் கழிக்குமிடங்களில் பயணிள் இருக்கைகளை அமைப்பதன் மூலம் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும். 

    எனவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும், பொதுநல அமைப்புகளும் இணைந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், போக்குவரத்து ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×