search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ
    X
    ஆட்டோ

    ஆட்டோ, கார்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்- போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. அறிவுறுத்தல்

    முழு ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறியதாக கடந்த 9-ந்தேதி 19,962 வழக்குகளும், 16-ந்தேதி 14,956 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 78 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அனைத்து மாநகர கமி‌ஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கானது கடைபிடிக்கப்பட்டது.

    இந்த முழு ஊரடங்கின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் காவலர்களிடம் நடந்து கொண்டனர். சிலர் காவலர்களை தாக்கிய போதும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் துறைக்குரிய பொறுப்புடனும், பொறுமையுடனும், மனிதாபிமானத்துடனும், சாமர்த்தியத்துடனும் நடந்து கொண்டதை பாராட்டுகிறேன்.

    மேலும் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்கள் ரோந்து சென்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியது. காவல்துறை மீது மக்களுக்கு நன்மதிப்பையும், நம்பிக்கையையும், ஏற்படுத்தி உள்ளது.

    முழு ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறியதாக கடந்த 9-ந்தேதி 19,962 வழக்குகளும், 16-ந்தேதி 14,956 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 78 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கின் போது வெளியூர் சென்று திரும்புவோர் ரெயில் நிலையம், பேருந்து நிலையம் வந்த பின்பு வீடு செல்வதற்கு ஆட்டோ மற்றும் டாக்சி கிடைக்காமல் அவதியுற்றனர்.

    சிலர் ஆட்டோ பயணத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது. இனிவரும் முழு ஊரடங்கு நாட்களில் வெளியூர் சென்று திரும்பும் போது மக்களுக்கு ரெயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் ஆட்டோ மற்றும் டாக்சியில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×