search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கன்னியாகுமரியில் 71,703 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    கன்னியாகுமரியில் 71,703 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள 475 பள்ளிகளில் தகுதிடைய 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் மொத்தம் 74 ஆயிரத்து 165 மாணவர்கள் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு தகுதியானவர்கள். இதில் இதுவரை 71 ஆயிரத்து 703 மாணவ-மாணவிகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி முதல் தவணை  செலுத்தப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து நாட்களிலும்  அரசு கூடுதல் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இயங்கும்.

    பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து துணை சுகாதார  மையங்களுக்கு உட்பட்ட கிராம  பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டமும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும் களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் இதுவரை 14 லட்சத்து 58 ஆயிரத்து 363 பேருக்கு கொரோனா  பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தற்போது ஆயிரத்து 499 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 59 பேரும், கோவிட் கவனிப்பு மையங்களில், தனியார் ஆஸ்பத்திரிகளில் 221 பேரும், மற்றும் வீட்டு சிகிச்சையில் 1219 பேரும் உள்ளனர்.

    கடந்த 16-ந் தேதி 764 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக  கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 339 பேர். இதில் 59 ஆயிரத்து 246 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட தடுப்பு மருந்து 521 பேருக்கும், 2-ம் கட்ட தடுப்பு மருந்து 1235 பேருக்கும் ஆக மொத்தம் இதுவரை நீரழிவு நோய், இணைநோய் உள்ளவர்கள் 71 ஆயிரத்து 7 பேருக்கும், கர்ப்பிணி பெண்கள் 18 ஆயிரத்து 788 பேருக்கும், பாலூட்டும் பெண்கள் 18 ஆயிரத்து 272 பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

    மொத்தமாக இதுவரை முதல்கட்ட தடுப்பு மருந்து 11 லட்சத்து 93 ஆயிரத்து 465 பேர்களுக்கும், 2-ம் கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரத்து 293 பேர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் முககவசம் அணியாததது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இது வரை மொத்தம் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 188 பேர்களுக்கு ரூ. 2 கோடியே 84 லட்சத்து 66 ஆயிரத்து 862 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×