
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
ஆனாலும் தனியார் ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. இதை பயன்படுத்தி ஒருசில ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்து இருந்தார்.
மேலும் இதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 250 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தவிர அநேக ஆம்னி பஸ்கள் வரி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. போக்குவரத்து துறை விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுக்கள் நேற்று முதல் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு பெரும்பாலானவர்கள் சென்னை திரும்புகிறார்கள். இதனால் ஆம்னி பஸ்களில் தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 18004256151 என்ற இலவச தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் அரசு நிர்ணயிப்பதில்லை. இதனால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் முகமது அப்சல் கூறியதாவது:-
இந்த தொழில் ஏற்கனவே நசுங்கி விட்டது. மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு தொழிலை செய்து வருகிறோம். பொங்கலுக்கு 3-ல் ஒரு பகுதி ஆம்னி பஸ்களே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் கூட இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை.
ஆனாலும் டீசல் விலை மற்றும் வரி உயர்வு இத்தொழில் மோசமாக நிலைக்கு செல்ல காரணமாக அமைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.