search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 790 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நோய் பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொது இடங்களில் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    எனினும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. டாக்டர்கள், போலீசார், தீயணைப்பு வீரர்கள், மருத்துவ பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    போலீசாரை பொருத்த வரை தற்போது 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார். மாவட்ட தீயனைப்பு அதிகாரி மற்றும் நிலைய அதிகாரிகள் உள்பட மொத்தம் 28 தீயணைப்பு வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பாதிப்பு எண்ணிக்கை 500-க்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அது மேலும் உயர்ந்துள்ளது.
    அதாவது குமரி மாவட்டத்தில் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ் பத்திரி மூலமாகவும், சோதனை சாவடிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலமாகவும் மொத்தம் 4303  பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 449 ஆண்கள் மற்றும் 341 பெண்கள் என மொத்தம் 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 255 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே போல அகஸ்தீஸ்வரம்-50, கிள்ளியூர்-47, குருந்தன்கோடு-73, மேல்புறம்-58, முன்சிறை-26, ராஜாக்கமங்கலம்-49,

    திருவட்டார்-118, தோவாளை-23, தக்கலை-82 மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்த 7 பேருக்கும், தஞ்சாவூரில் இருந்து வந்த ஒருவருக்கும், ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்த 2 பேருக்கும்,  தூத்துக்குடியில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 790 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வந்தாலும், நோய் தொற்று பாதிப்பு மற்றும் வீரியம் சற்று குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.

     எனவே ஆஸ்பத்திரிகளை காட்டிலும் வீடுகளிலேயே அதிகப்படியான நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அந்த வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 59 பேரும், கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 229 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டு தனிமையில் 1219 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    வீட்டு தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் தினமும் நேரில் சென்று கண்காணிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான மாத்திரைகளும் மருந்துகளும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
    நாகர்கோவில் மாநகரில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

    எனவே கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் முககவசம் அணியாதவர்களுக்கு  அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் 3 போலீசாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால்  போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×