search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் கண்டறியப்பட்டுள்ள பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தை காணலாம்
    X
    பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் கண்டறியப்பட்டுள்ள பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தை காணலாம்

    விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

    விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பிடாகம் கிராமம். இங்கு தென்பெண்ணை ஆற்றில் சிற்பம் ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் நேற்று பிடாகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மண்ணில் கண்டறியப்பட்டுள்ள மூத்ததேவி சிற்பம் என்பதும், இது பல்லவர் காலத்தை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மூத்ததேவி வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் தொன்மையானது. தமிழ்நாட்டின் பல இடங்களில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மூத்ததேவி சிற்பங்கள் காணப்படுகின்றன. தற்போது பிடாகம் பகுதியில் இந்த சிற்பம் கிடைத்துள்ளது. ஆற்று மணலில் புதைந்திருந்த இந்த சிற்பம் அண்மையில் பெய்த மழை வெள்ளம் காரணமாக தற்போது வெளிப்பட்டு இருக்கிறது.

    பல்லவர் காலத்தை சேர்ந்த இந்த சிற்பம் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கலைநயத்துடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்ததேவி தனது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோருடன் காட்சி தருகிறார். விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த சிற்பத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கலாம். அருங்காட்சியகம் அமைந்தவுடன் அதில் இடம்பெற செய்யலாம். இதுபற்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×