search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயமான வேல்களுக்கு பதிலாக புதிய வேல்களை தயாரித்த காவடிக்குழுவினர்.
    X
    மாயமான வேல்களுக்கு பதிலாக புதிய வேல்களை தயாரித்த காவடிக்குழுவினர்.

    பழனிக்கு பாதயாத்திரை வந்த நகரத்தாரின் தங்கம், தாமிர வேல்கள் திருடு போனது எப்படி?- பக்தர்கள் அதிர்ச்சி

    பழனிக்கு பாதயாத்திரை வந்த நகரத்தார் குழுவினரின் தங்கம் மற்றும் தாமிர வேல்கள் திருடு போன சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல்:

    பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார், நாட்டார்கள் உட்பட பல குழுவினர் காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனி வருவது வழக்கம். காரைக்குடி கண்டனூரிலிருந்து வைரவேல், மேலசிவபுரியிலிருந்து தாமிர வேல், குன்றக்குடி நகரத்தார் சார்பில் ரத்தினவேல், நெற்குப்பையில் இருந்து தங்கவேல், தாமிர வேலுடன் இவர்கள் பாதயாத்திரை வருவார்கள்.

    நெற்குப்பை நகரத்தார் சார்பில் கடந்த 422 ஆண்டுகளாக காவடி எடுத்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் 3.5 இன்ஞ் நீளமுள்ள தங்கவேல் மற்றும் தாமிரவேலை எடுத்துக்கொண்டு 95 காவடிகளுடன் பழனிக்கு வந்தனர். தெற்குகளம், பாண்டங்குடி, நத்தம், சமுத்தி ராபட்டி, கொசவபட்டி, திண்டுக்கல் வழியாக பழனிக்கு செல்வார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நத்தம் சமுத்திராபட்டியில் உள்ள பழனியாண்டவர் முருகன் மண்டபத்தில் அவர்கள் தங்கினர். தாங்கள் கொண்டுவந்த வேல்களை கருவறைக்குள் வைத்து பூட்டிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது தங்கம் மற்றும் தாமிர வேல்களை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மாற்று வேல் கொண்டுவர ஏற்பாடு செய்தனர். அதன்படி புதிய வேல் தயாரித்து அதற்கு பூஜை செய்து மீண்டும் பழனிக்கு பாதயாத்திரையாக தொடர்ந்தனர். வழக்கமாக இவர்கள் பயண திட்டத்தின்படி தைப்பூசத்திற்கு முதல்நாள் பழனிக்கு சென்றுவிடுவார்கள். பழனியில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் குன்றக்குடி, கண்டனூர், மேலசிவபுரி காவடி குழுவினர் அவரவர்களுக்கு உள்ள மண்டபத்தில் தாங்கள் கொண்டுவரும் வேல்களுக்கு வழிபாடு நடத்துவர். பின்னர் தைப்பூசம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு காவடி, வேல்களுடன் மலைக்கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று ஊர் திரும்புவார்கள். இதுவரை வேல்கள் மாயமான சம்பவம் நடந்திராத நிலையில் தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. காவடி குழுவினர் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் வேல் மாயமானது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் இதுவரை அவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. காவடி குழுவினரிடையே சமாதானம் செய்துகொண்டு அவர்கள் திட்டமிட்டபடி பயணத்தை தொடர பழனிக்கு சென்றுவிட்டனர். இதனால் உண்மையிலேயே வேல்கள் மாயமான சம்பவம் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×