search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிச்சோடிய தூத்துக்குடி புதிய பஸ் நிலையம்.
    X
    வெறிச்சோடிய தூத்துக்குடி புதிய பஸ் நிலையம்.

    தூத்துக்குடியில் முழு ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு அபராதம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விதிகளை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
    தூத்துக்குடி:

    இன்று முழு ஊரடங்கையொட்டி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

    ஏற்கனவே காணும் பொங்கலான நேற்று சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லாததால் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
    வெறிச்சோடி காணப்பட்ட சாலை
    சாலைகளை தடுப்புகள் கொண்டு அடைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நீண்ட தூர பஸ், ரெயில் பயணங்களுக்காக செல்பவர்கள் அதற்கான பயண சீட்டுகளை காண்பித்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். 

    இதே போல் மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களும் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கையொட்டி இன்று பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. 

    ஓட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டு பார்சல்கள் வழங்கப்பட்டது.

    பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப் பட்டு இருந்தன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை களைகட்டும். 

    ஆனால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை. முழு ஊரடங்கு காரணமாக பரபரப்பாக காணப்படும் தூத்துக்குடி மாநகர பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் விளாத்திகுளத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட எல்லை பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சபாபதி, நாககுமாரி, ராணி, பத்மாவதி உள்ளிட்டவர்கள் அடங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகள், சந்திப்பு பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊரடங்கால் பஸ் நிலையம், முக்கிய வீதிகள் வெறிச்சோடியது. உடன்குடி மெயின் பஜார், நாலு சந்திப்பு, பஸ் நிலையம், சத்திய மூர்த்தி பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 

    சாலைகளில் வாகன போக்குவரத்து பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.  குலசேகரன்பட்டினம், பரமன்குறிச்சி பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    இதேபோல் காயல்பட்டணம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் ஒரு சில ஆட்டோக்கள் இயங்கப்பட்டது.

    புறநகர் மாவட்ட பகுதிகளில் 1,000 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் சுற்றியவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். 

    கொரோனா ஊரடங்கை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×