search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7 சப்த கன்னிகள் கடல் அன்னைக்கு சிறப்பு வழிபாடு
    X
    7 சப்த கன்னிகள் கடல் அன்னைக்கு சிறப்பு வழிபாடு

    உலக அமைதிக்காக மீனவ கிராமத்தில் நூதன பொங்கல் விழா

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே மீனவ கிராமத்தில் உலக அமைதிக்காக நூதன பொங்கல் விழா நடத்தப்பட்டது. அதில் 7 சப்த கன்னிகள் கடல் அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரணபத்திர காளியம்மன் கோவில் உள்ளது. 

    இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் முன்பு இந்த கோவிலில் வழிபட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.  

    மோர்ப்பண்ணை மீனவ கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு கிராமத்தின் சார்பில் பருவம் அடையாத 7 சப்தகன்னிகளை (சிறுமிகளை) தேர்வு செய்து, அவர்களை பொங்கலுக்கு முதல் ஒரு வாரம் முன்பு விரதம் இருக்க செய்து தை பொங்கல் அன்று ஊர்மக்கள் ஒன்றுகூடி வழிபாடு நடத்துவார்கள்.  

    அதன்படி ஸ்ரீரணபத்திரகாளியம்மன் கோவில் முன்பு நேற்று அம்மனுக்கு சிறப்பு பொங்கல் வைத்து அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. 

    உலக அமைதிக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும், கடலில் மீன் வளம் பெருக வேண்டியும், மீனவர்களுக்கு கடல் அன்னை பாதுகாப்பு தர வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. 

    கங்காதேவியை வழிபட்டு கிராமத் தலைவர் மாடம் பூரான், செயலாளர் மலைக்கண்ணன், பொருளாளர் முத்துவயிறு, கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகவல்லி பாலன், கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் அட்டையில் ஒரு படகு செய்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.  

    பொங்கலை படகில் வைத்து 7 சப்த கன்னிகள் ஒவ்வொருவரும் இளநீர், பால் கலந்த கும்பத்தை தலையில் சுமந்தபடி மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கடற்கரைக்கு சென்றனர். 

    சப்த கன்னிகளை கடலுக்குள் அழைத்துச்சென்று மாதிரி படகில் நெய்விளக்கு ஏற்றி சிறப்பு தீபாராதனை செய்து, கன்னிகள் தலையில் சுமந்து வந்த கும்பத்தின் மேலுள்ள தேங்காயை முறைமாமன்மார்கள் பறித்து கொண்டனர். 

    இதனைத்தொடர்ந்து கும்பத்தில் உள்ள புனித நீரை கடலில் ஊற்றி படகை கடலில் செலுத்தி கடல் அன்னையை கிராம மக்கள் ஒன்றுகூடி வழிபட்டனர்.

    Next Story
    ×