search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிழக்கு கடற்கரை சாலை
    X
    கிழக்கு கடற்கரை சாலை

    கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் சிக்கி தவிக்கும் மக்கள்

    ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வழியாக தினசரி நூற்றுக் கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.

    ராமநாதபுரம் நகரில் உள்ள கீழக்கரை ரெயில்வே கேட் அருகே ரெயில் பாதை மேல் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் இங்கு நிறுத்தப்பட்டு பணிகள் இறக்கிவிடப்பட்டு வழி மாற்றம் செய்யப்படுகின்றன.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து குறிப்பாக ராமேசுவரம், மண்டபம், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை பகுதிகளில் இருந்து புறநகர் பஸ்களில் வரும் வெளியூர் பயணிகள் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம், எம்ப் ளாய்மெண்ட் அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், பிற துறை அரசு அலுவலகங்கள் செல்ல இங்கு இறக்கி விடப்படுகின்றனர். இதனால் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதி எப்போதும் போக்கு வரத்து நிறைந்து காணப்படுகிறது.

    திருச்செந்தூர், தூத்துக் குடி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை பகுதிகளில் இருந்து வரும் சாலையும், ராமேசுவரம், மண்டபம், உச்சிப்புளி பகுதிகளில் இருந்து வரும் சாலையும், ராமநாதபுரம் நகர், கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து வரும் பிரதான சாலையும், திருச்சி, காரைக்குடி, தேவிபட்டினம் பகுதியில் இருந்து வரும்  சாலையும்,  சந்திக்கும் இடமாக உள்ளது. இதனால் 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து உள்ளது.

    ஆனால் இந்த பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னலோ, போலீசாரோ இதுநாள் வரை செயல்படவில்லை. இங்குள்ள போக்குவரத்து சிக்னல் நீண்ட காலமாக பழுதடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவும் முறையாக செயல்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் எந்த ஊருக்கு எந்த திசையில் செல்வது  என்பதை  வழிகாட்டும் ஊர் பெயர் பலகை, தூரம், எந்த திசையிலும் வைக்கப்படவில்லை. எனவே சாலை சந்திப்பை கடந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் திடீரென வாகனங்களை நிறுத்துவதாலும், திசை மாறுவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் வந்திறங்கும் இந்த சாலை சந்திப்பு பகுதி யில் பொது கழிப்பறை, கட்டண கழிப்பறை வசதி இல்லை. இதனால் திறந்த வெளியையே  கழிப்பறையாக பயன்படுத்தி அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி பஸ்கள் வரும்வரை காத்திருக்க வரும் பயணிகள் மழை, வெயில் நேரங்களில் பாது காப்பாக ஒதுங்ககூட சாலை சந்திப்பின் எந்த பகுதியிலும் நிழற்கூடம் வசதி இல்லை. எனவே மழை, வெயில் காலங்களில் மிகவும் முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர்.

    எதிர் திசையில் வரும் பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்தப்படுவதால் ராமேசு வரம் நோக்கி வரும் பஸ்கள் கிழக்கு பகுதியில் சற்று தள்ளியும், ராமநாதபுரம் நோக்கி செல்லும் பஸ்கள் மேற்கே சற்று தள்ளியும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கும் வகையில் பஸ் நிறுத்தங்கள் மாற்றி அமைத்தால் சாலை விபத்துக்களை தவிர்க்க லாம்.

    இந்த பகுதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலையோரம் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை,  நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட காவல் துறை, உள்ளாட்சித்துறை விரைந்து செயல்பட்டு இந்த  கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல், பழுதை சீர் செய்ய வேண்டும், போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும், வழிகாட்டு பலகை வைக்கவேண்டும், கழிப்பறை வசதி, பயணிகள் நிழற்கூடங்கள் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    பஸ் நிறுத்தங்களை தள்ளி அமைக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×