search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக தேர்தல் ஆணையம்
    X
    தமிழக தேர்தல் ஆணையம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

    சென்னை மாநகராட்சியில் ஆண், பெண் வார்டுகள் பிரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. தற்போது அந்த பணிகள் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    சென்னை:

    தமிழகத்தில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தப்படாமல் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

    நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு அமைந்த பிறகு விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தலை நடத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன்படி கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டமாக விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்

    இந்த நிலையில் ஜனவரி 31-ந் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதமே சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

    இதன்படி இந்த மாதம் இறுதிக்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கேற்ப அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவந்தது.

    வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகளை அமைத்தல், பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், மின்னணு எந்திரங்கள் தயார்படுத்துதல், உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து வந்தது.

    இதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் மாநிலத் தேர்தல் ஆணையர் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி இருந்தார்.

    இந்த நிலையில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு அந்த பணிகளும் முடிவடைந்ததால் வருகிற திங்கட்கிழமை (17-ந்தேதி) நகர்ப்புற தேர்தல் தேதியை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது.

    ஆனால் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு வார்டுகளை ஒதுக்கியதில் குளறுபடி உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பார்த்தீபன் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு மட்டும் 105 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டப்படி சரிசமமாக வார்டுகள் பிரிக்கப்படவில்லை என்று கூறி இருந்தார்.

    இதை விசாரித்த நீதிமன்றம் மண்டல வாரியாக பெண்கள் வார்டுகளை பிரிக்காமல் 50 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் வார்டு அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று கூறியது.

    அதன்படி சென்னை மாநகராட்சியில் ஆண், பெண் வார்டுகள் பிரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. தற்போது அந்த பணிகள் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இன்னும் 2 நாட்களில் ஆண்கள் வார்டுகள், பெண்கள் வார்டுகள், இட ஒதுக்கீடு வார்டுகள் எவை எவை என்பது கெஜட்டில் வெளியிடப்படும் என அதகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    அதன்பிறகு வருகிற 24-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×