search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    60 வயதை கடந்தோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகோள்

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் முன்கள பணியாளர், 60 வயது கடந்தோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 39 வாரம் கடந்த  சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்கள், இணை நோய் கொண்ட 60 வயது கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் முகாம்கள் நடைபெறுகிறது.

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் கூறியதாவது:-

    கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் 2-வது தவணை செலுத்தி 9 மாதம் ஆன முன்கள பணியாளர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆதார் அட்டை ஆவணம் மற்றும் இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றுடன் சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    மாநகராட்சி பகுதியில் தொற்று பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. பாதிப்படைந்தோருக்கு உரிய சிகிச்சையும் உடனிருந்தோருக்கு உரிய பரிசோதனை மற்றும் கண்காணிப்பு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. இதுகுறித்து சுகாதார பிரிவினர் கண்காணித்தும் வருகின்றனர்.

    அவ்வகையில் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், உதவி கமிஷனர், நகர் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். சந்தை வளாகத்தில் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    மேலும் தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சந்தை வளாகத்தில் பொதுமக்களுடன் கமிஷனர் கிராந்தி குமார், தொற்று பரவல் நடவடிக்கை குறித்து எந்தளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என கேட்டறிந்தார்.
    Next Story
    ×