search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் இருந்து பஸ், ரெயில்களில் 7 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

    கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொங்கல் மற்றும் தைப்பூச பண்டிகைகளை கொண்டாடும் வகையில் வெளியூர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நேற்று முன்தினம் முதல் சென்னையில் 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அரசு பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களிலும் மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் நீண்ட தூரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பெரும்பாலானவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாகவே பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்தனர்.

    இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பின. சிறப்பு ரெயில்களும் நிரம்பியதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கின்றனர்.

    கடந்த 2 நாட்களாக வெளியூர் பயணத்தை மேற்கொண்டு வரும் பொதுமக்களால் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் பலர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை குறைக்க 23 ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மற்றும் கோவை, திருவனந்தபுரம், மங்களூர் சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் முழு அளவில் பயணம் செய்தனர்.

    பகல் நேர ரெயில்களில் மட்டுமே முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு நேர ரெயில்களில் அனைத்து பயணிகளும் முன்பதிவு செய்துதான் பயணிக்க வேண்டும். அந்த அடிப்படையில் சென்ட்ரலில் இருந்து மட்டும் சுமார் 2 லட்சம் பயணிகள் 2 நாட்களில் பயணம் செய்தனர்.

    இதேபோல எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் 24 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சுமார் 1 லட்சம் பயணிகள் அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற நகரங்களுக்கும் புறப்பட்டு சென்றனர்.

    அரசு பஸ்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். முதல் நாளில் 1.15 லட்சம் பேரும், நேற்று 1.85 லட்சம் பேரும் பயணம் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. 5 ஆயிரம் பஸ்கள் இதுவரையில் இயக்கப்பட்டுள்ளன.

    இதேபோல சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பஸ்கள் மூலம் 50 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதவிர கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் சென்றவர்கள் சுமார் 1 லட்சம் பேர் இருப்பார்கள் என்று தெரிகிறது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொங்கல் மற்றும் தைப்பூச பண்டிகைகளை கொண்டாடும் வகையில் வெளியூர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

    நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று கடைசி நேர பயணத்தை பெரும்பாலானவர்கள் மேற்கொள்வார்கள். இன்று 2,100 வழக்கமான பஸ்களுடன் 1,920 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,020 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் திட்டமிட்ட அளவு பஸ்களை விட அதிகளவு இயக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று காலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எந்தெந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ் தேவை என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு சிறப்பு பஸ்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

    Next Story
    ×