search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்கறிகள் வாங்க பாளை மகாராஜாநகர் உழவர் சந்தையில் திரண்ட கூட்டம்.
    X
    காய்கறிகள் வாங்க பாளை மகாராஜாநகர் உழவர் சந்தையில் திரண்ட கூட்டம்.

    நெல்லை மார்க்கெட்டுகளில் பொங்கல் விற்பனை விறுவிறுப்பு

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட் மற்றும் முக்கிய பஜார்களில் உள்ள கடைகளில் இன்று பொங்கல் பண்டிகையையொடடி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
    நெல்லை:

    நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை  மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் விற்பனைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

    பொங்கல் என்றாலே புதுமாப்பிள்ளைகளுக்கு பொங்கல்படி வழங்குவது வழக்கம். இதற்காக கரும்பு, மஞ்சள் குலைகள், பனங் கிழங்கு மற்றும் காய்கறிகள், புத்தாடைகள் போன்றவைகளை பெண் வீட்டார்கள் மாப்பிள்ளைக்கு வழங்குவார்கள். 

    பொங்கல்படி வழங்குவதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து காய்கறி மற்றும் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. இதைத்தொடர்ந்து பொருட் களின் விலையும் அதிகரித்து உள்ளது. 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மஞ்சள் குலை ரூ.15 முதல் ரூ.20 வரை பாளை மார்க் கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு கரும்பு ரூ.50-க்கும், மஞ்சள் குலை ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பனங்கிழங்கு ரூ.5-க்கும், 25 பனங்கிழங்கு கொண்ட  ஒரு கட்டு ரூ.125 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

    பொங்கல்படியுடன் வெற்றிலை, பாக்கு சேர்த்து கொடுப்பது வழக்கம். இதனால் வெற்றிலை விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. 5 வெற் றிலை ரூ.10-க்கு விற்கப்படு கிறது. இதுபோல 5 வாழை இலை கொண்ட ஒரு கட்டு ரூ.25 முதல் 30 வரை நெல்லை பகுதியில் விற்கப்படுகிறது. 

    பொங்கலை முன்னிட்டு நெல்லை, பாளை மார்க்கெட்டுகளில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உழவர் சந்தைகளில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. ஆனால் பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.80&க்கு விற்கப்படுகிறது.

    இதுபோல 1 கிலோ எடை உள்ள காய்கறிகள் உருளை கிழங்கு ரூ.40 முதல் ரூ.50 வரையும், தக்காளி-ரூ.40, சின்ன வெங்காயம்- ரூ.80, பெரிய வெங்காயம்&ரூ.50, அவரை- ரூ.80, பீன்ஸ்-ரூ.80, கேரட்-ரூ.100, கோஸ்- ரூ.60 என பாளை மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

    கிழங்கு வகைகளான சேனை கிழங்கு ரூ.30-க்கும், சீனி கிழங்கு- ரூ.50, வள்ளி கிழங்கு மற்றும் பிடி கிழங்கு வகைகள் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கிழங்கு வகைகள் அனைத்தும் உழவர் சந்தைகளில் ரூ.40-க்கே விற்பனை செய்யப்படுகிறது.

    நெல்லை, பாளை உழவர் சந்தைகளில் கற்பூர வள்ளி வாழைபழம் ஒரு கிலோ ரூ.50-க்கும், நாட்டு வாழைப்பழம் ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

    பாளை மார்க்கெட்டில் 10 கற்பூர வள்ளி பழம் ரூ.40-க்கும், ஒரு நாட்டு வாழைப்பழம் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை யொட்டி கதம்ப காய்கறிகள், கிழங்குகள் போட்டு குழம்பு வைப்பது வழக்கம்.

    அதற்காக அனைத்து காய்கறிகள், கிழங்குகள் போடப்பட்ட ஒரு கிலோ கதம்ப காய்கறி ரூ.100 முதல், 150 வரை விற்கப்படு கிறது. 

    இன்று காலையிலேயே நெல்லை, பாளை மார்க்கெட், டவுன் நயினார்குளம் மார்க்கெட் பகுதிகளில் கடும் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் வாகனங்களில் வந்து காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்கி சென்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

    பொங்கல் விற்பனை களைகட்டியதால் பாளையில் இருந்து பேட்டை செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. 
    Next Story
    ×