search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு
    X
    கரும்பு

    கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு விற்பனை மந்தம்- வியாபாரிகள் கவலை

    ஆந்திரா, திருவள்ளூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு குவிந்துள்ளது.
    போரூர்:

    பொங்கல் பண்டிகை விழா நாளை மறுநாள் (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கோயம்பேடு சந்தைக்கு கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, சேலம் மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.

    இதேபோல் ஆந்திரா, திருவள்ளூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    மேலும் பிடி கருனை, கார கருனை, சிறு கிழங்கு, வெத்தலவள்ளி கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, மொச்சைக்காய், துவரங்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களும் காய்கறி மார்கெட்டில் விற்பனைக்கு அதிகளவு வந்துள்ளது.

    ஆண்டுதோறும் மார்கெட் வளாகத்தில் சிறப்பு சந்தை மூலம் பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் சிறப்பு சந்தை நடத்த வெளி வியாபாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. சிறப்பு சந்தை இல்லாததால் மார்கெட் வளாகத்தை சுற்றி உள்ள "ஏ" மற்றும் "ஈ" சாலைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகளை வாகனங்களில் வைத்து வியாபாரிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை பொங்கல் பொருட்கள் விற்பனை மிகவும் மந்தமான நிலையிலேயே உள்ளது. குறைந்த அளவிலான சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமே பொருட்களை வாங்கி செல்கின்றனர். நாளை காலை முதல் விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கரும்பு ஒரு கட்டு- ரூ.250 முதல் ரூ.400 வரையும், மஞ்சள் கொத்து (ஒரு கட்டு) ரூ.80-க்கும், இஞ்சி கொத்து (ஒரு கட்டு) ரூ.50-க்கும், பிடி கருணைக்கிழங்கு (ஒரு கிலோ) ரூ.40-க்கும் கார கருணைக்கிழங்கு- ரூ.40-க்கும் வெத்தலவள்ளி கிழங்கு ரூ.60-க்கும் சிறு கிழங்கு ரூ.70-க்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு ரூ.40-க்கும் மொச்சைக்காய்- ரூ.70-க்கும் துவரங் காய் ரூ.80-க்கும் விற்பனை ஆகிறது.
    Next Story
    ×