search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்புகளை ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.
    X
    கரும்புகளை ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.

    களை கட்டும் பொங்கல் பொருட்கள் விற்பனை

    கால்நடை செல்வங்களை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
    திருப்பூர்:

    நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் பொங்கல் திருவிழாவை 4 நாட்களுக்கு கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாளின் முதல்நாள் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்‘ என்ற அடிப்படையில் கழிவுகளை தீயிட்டு எரித்து போகி கொண்டாடுகின்றனர்/ 

    வீடுகளுக்கு காப்பு கட்டுகின்றனர்.தை முதல் நாளன்று அனைத்து உயிர்கள் இயக்கத்துக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். 

    கிராமங்களில் வீடுகளை சாணம் இட்டு வழித்து, வாசல்களில் வண்ண கோலங்கள் வரைந்து புதுப்பானையில், புத்தரிசியிட்டு இரு பக்கம் செங்கரும்புகள் வைத்து பொங்கல் வைக்கின்றனர்.

    இரண்டாம் நாள் உழவுக்கு உறுதுணையாக உள்ள கால்நடை செல்வங்களை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று பட்டியில் பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு, சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது. 

    பொங்கல் பண்டிகையில் கடைசி நாள், ‘காணும் பொங்கலாக’ கொண்டாடப்படுகிறது. கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து, கிராமமே ஒற்றுமையாக வழிபாடு நடத்துகின்றனர்.

    இந்தநிலையில் பொங்கல் வழிபாட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை திருப்பூர் மாவட்டத்தில் ‘களை’ கட்டியுள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட  உடுமலை, தாராபுரம், காங்கேயம், உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் மண் பானைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

    அளவுகளை பொறுத்து மண் பானை ரூ.50 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதே போல், புதுக்கோட்டை, திருச்சி உட்பட மாவட்டங்களில் இருந்து கரும்பு வரத்து நடப்பாண்டு குறைந்துள்ளதால் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது கரும்பு ஜோடி ரூ.100 க்கு விற்பனையாகிறது.

    தைத்திருநாள் கொண்டாட்டங்கள் வீடுகளில் காப்பு கட்டிய பிறகே துவங்குகிறது. காப்பு கட்டுவதற்காக வேப்பிலையுடன், பூளைப்பூ சேர்த்து வைக்கப்படுகிறது. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் பூளைப்பூ கட்டு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொங்கல் விழாவுக்காக கரும்பு, மஞ்சள் செடி, பூ, பழவகைகள் விற்பதை போல் பூளைப்பூ மற்றும் ஆவாரம் பூ விற்பனையும் துவங்கிவிட்டது.

    ஊத்துக்குளி அடுத்த கன்னிவாடி பகுதிகளை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள், ஆற்றோரமாக வளர்ந்துள்ள பூளை பூவை அறுவடை செய்து தலா 10 ரூபாய்க்கு விற்கும் கட்டுகளாக மாற்றி திருப்பூரில் வந்து வியாபாரத்தை துவக்கியுள்ளனர்.

    வியாபாரிகள் கூறுகையில்:

    பூளைப்பூ வியாபாரம் மூன்று நாட்களுக்கு மட்டும் நடக்கும். எங்கள் ஊரில் வளர்ந்துள்ள பூளைப்பூக்களை கொய்து கட்டுகளாக மாற்றி மோட்டார் சைக்கிளில் வந்து விற்கிறோம் என்றனர்.
    Next Story
    ×