search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்காணிப்பு கேமரா
    X
    கண்காணிப்பு கேமரா

    கோவில்களில் பக்தர்கள் வருகை, காணிக்கை கேமராவில் கண்காணிப்பு

    கோவில்களில் சிறப்பு தரிசன வழிகளில் போதிய எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை ஐ.டி.எம்.எஸ். ஒருங்கிணைந்த திருக்கோவில் மேலாண்மை திட்டம் செயலாக்கத்தின் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோவில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திட ஆணையர் அலுவலகத்தில், கோவில்களின் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கட்டுப்பாட்டு அறையில் அன்னதானத் திட்டம், முடிகாணிக்கை திட்டம், சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு சிரமமின்றி தரிசனத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ள கோவில்கள் ஆகியவற்றை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலை மூலம் கண்காணிக்க முடியும்.

    அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கோவில்களிலும் அன்னதான கூட சமையலறை, பக்தர்கள் உணவருந்தும் இடம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், முடிகாணிக்கை செலுத்தப்படும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், அதிகளவு பக்தர்கள் கூட்டம் வருகை தரும் கோவில்களில் மாதந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கோவில்களில் சிறப்பு தரிசன வழிகளில் போதிய எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் வெளிப்படை தன்மையுடன் கோவில்களில் நடைபெறுவதை உடனுக்குடன் கண்காணிப்பதுடன் குறைகளையும் உடனடியாக களைய முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×