search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

    பொங்கல் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

    மனத்தூய்மை, அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப்பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:

    உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பெருக, வளமை வளர, அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

    போகிப் பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 4 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும்.

    தை முதல் நாளன்று புதுப்பானையில் அரிசியிட்டு ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, இறைவனை வணங்கி அனைவரும் ஒன்றுபட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ள மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். மனத்தூய்மை, அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப்பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும்.

    பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட அம்மாவும், அதனைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி, சீரிய முறையில் செயல்படுத்தின என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர விரும்புகிறோம்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும். நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும், கடினமாக உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டு வந்து சேர்க்கட்டும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, எங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:

    போகியில் பழையன நீங்கி “தை பிறந்தாள் வழி பிறக்கும்“ என்று நம் முடைய கிராமங்களில் சொல்லப்படுகிற மொழிக்கேற்ப, மீண்டும் மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கி அனைவரும் அச்சமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திட தைத்திருநாளில் வழி பிறக்கட்டும். எல்லா வளங்களையும், நலன்களையும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பொங்கல் திருநாள் கொண்டு வந்து சேர்க்கட்டும் என் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்:-

    இந்த பொங்கல் திருநாளில் நம்முடைய பூஜையும், பிரார்த்தனையும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விவசாயிகளுடைய மனதில் நம்பிக்கையை உண்டாக்கட்டும். இப்படி தொடர்ந்து உழைத்து கொண்டு இருக்கிற அனைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நெஞ்சார பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் நாடு முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் முடிவுக்கு வரவும், மக்கள் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கவும், கஷ்டப்பட்டு உழைத்து வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு வாழ்வில் வளத்தை சேர்க்கவும் செய்யட்டும்.

    நல்ல விளைச்சலும், விலைவாசியும் விவசாயிகளுக்கு கிடைத்திட இந்த தை மாதம் முதல் வழி பிறக்கட்டும்.



    Next Story
    ×