
ஜல்லிக்கட்டு போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையர்களை பந்தாட காத்திருக்கும் மதுரை கருப்பன் காளைக்கு தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து மதுரை தொழிலதிபர் அழகு பார்த்து வருகிறார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான் அந்த அளவுக்கு பொங்கலும், ஜல்லிக்கட்டும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போல களைகட்டும் உன்னதமான திருநாள் தை திருநாள் ஆகும். ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலகலப்பு ஜோராக இருக்கும்.
மதுரை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு இதுவரை 300 பரிசுகளை குவித்த மதுரை கருப்பன் காளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையர்கள் பந்தாட காத்திருக்கிறது. இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் காளை கருப்பனுக்கு விசேஷ பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தினமும் நீச்சல், மணல் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பருத்திக் கொட்டை, பேரிச்சம்பழம், கடலைப்புண்ணாக்கு, கடலை மிட்டாய் உள்ளிட்ட சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இதுவரை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு கருப்பன் 300-க்கும் மேற்பட்ட பரிசுகளை குவித்துள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை, விராலிமலை, சிராவயல், அரளிப்பாறை, தர்மபுரி, ஈரோடு, குமாரபாளையம், கண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கருப்பன் களமிறங்கியது.
இதுவரை எந்த மாடுபிடி வீரர்களாலும் கருப்பனை பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பரிசுகளை அள்ளி வந்த வீரன் எங்கள் கருப்பன். தங்க காசுகள், குத்துவிளக்கு, மோட்டார் சைக்கிள், சைக்கிள், மிக்சி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பரிசுகளை கருப்பன் வென்றுள்ளது. தினந்தோறும் உரிய பயிற்சிகள் மற்றும் சத்தான உணவுகளை வழங்கி வருகிறோம்.
வருகிற 14-ந்தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறங்க காளை கருப்பனுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காளை கருப்பன் களமிறங்கினால் வாடிவாசல் அதிரும், அடக்க நினைக்கும் இளைஞர்கள் கூட அடங்கி விலகியோடும் வீரமும் தீரமும் காளை கருப்பனுக்கு உண்டு. இந்த போட்டியிலும் நிச்சயம் வீரர்களை பந்தாடி வெற்றிப்பரிசை கருப்பனே பெறும் என்று கம்பீரத்தோடு சொன்னார் ஜெயராமன்.